காவல் துறையினர் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்த குதூகல விழா! முதல் முறையாக கோவையில் நடைபெற்றது!!

   -MMH 

    காவல்துறை பணி என்பது அனைத்து அரசு பணிகளை விட மேலானது சிறப்பானது. காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் காவலர் முதல் அதிகாரி வரை அனைவரும் பணி என்று வந்துவிட்டால் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கிறார்கள். அவர்களின் சிறப்பான பணியினால் தான் எவ்வளவோ குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. அவர்களின் சேவைகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படி பணி நிமித்தமாக சுழன்று கொண்டிருக்கும் காவல்துறையில்

காவலர் முதல் அதிகாரி வரை அனைவரும் பங்கேற்கும் போலீஸ் குடும்ப விழாக்கள் கோவை மாநகரில் தொடங்கியுள்ளன. நேற்று குனியமுத்துார் மற்றும் போத்தனுாரில் நடந்த விழாவில், 200க்கும் மேற்பட்ட போலீஸ் குடும்பத்தினர் பங்கேற்றனர்.சட்டம்-- ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து சீரமைப்பு, குற்றத்தடுப்பு, வி.ஐ.பி., பாதுகாப்பு என போலீசார் மேற்கொள்ளும் பணிகள், மற்ற அரசுத்துறை ஊழியர்களின் பணிகளை காட்டிலும் வித்தியாசமானவை.

இந்த பணிச்சூழல், அதிகப்படியான மன அழுத்தங்களை எதிர்கொள்ளும் நிலையை போலீசாருக்கு ஏற்படுத்துகிறது. போலீசாரில் பலர், குறித்த நேரத்துக்கு சாப்பிடாமலும், உறக்கம் இல்லாமலும், தேவையான நேரத்தில் விடுமுறை கிடைக்காமலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது பணிச்சூழலால் குடும்பத்தினரும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இவற்றுக்கு தீர்வு காணும் நோக்கில் முதல் முயற்சியாக, போலீஸ் குடும்பத்தினர் அனைவரும் சந்திக்கும் வகையில் விழாக்களை நடத்த கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். 

அதன்படி போத்தனுார், செல்வபுரம், குனியமுத்துாரில் போலீஸ் குடும்ப விழாக்கள் நடந்து முடிந்துள்ளன. குனியமுத்துாரில் நடந்த விழாவில், துணை கமிஷனர் சிலம்பரசன் கலந்து கொண்டார். ஒவ்வொரு குடும்பத்தினரையும் போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக சந்தித்து பேசினர். போலீசார், அவர்களது குடும்பப்பெண்கள், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீஸ் குடும்பத்தினர் கூறுகையில்,'ஒரே ஸ்டேஷனில் பல ஆண்டுகளாக பணியாற்றினாலும், போலீசாரின் குடும்பங்களுக்குள் எந்த அறிமுகமும் இல்லாத நிலை இதுவரை இருந்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.அனைவருக்கும் மன அழுத்தம் போகும் வகையில் அதிகாரிகள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர். மன நல மருத்துவ நிபுணர்களும் நல்ல ஆலோசனைகளை வழங்கினர். இத்தகைய நிகழ்ச்சிகளை அடிக்கடி ஏற்பாடு செய்தால் போலீசார், குடும்பத்தினர் மத்தியில் இறுக்கம் தளரும். எங்காவது பொழுதுபோக்கு இடங்களுக்கு சுற்றுலா சென்று வரவும் ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.

காவல் துறையினரின் பணியை மதிப்போம். நாம் அனைவரும் தனிமனித ஒழுக்கத்துடன் நடந்து அவர்களின் பணி சிறக்க ஒத்துழைப்பு  நல்க வேண்டும் என்பதே அவர்களின்  விருப்பமாகும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments