கோவையில் கோலாகலமாக துவங்கியது தேசிய கார் பந்தயம்!!

      -MMH 

கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் இந்திய மோட்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளுப்புகளின் கூட்டமைப்பு நடத்தும் நான்கு சக்கர வாகனங்களுக்கான 'ப்ளூ பேண்ட் தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2022'ன் இரண்டாம் சுற்று போட்டிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் IPS வெள்ளிக்கிழமை கோவை ஜென்னீஸ் ரெசிடெண்சியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 

போட்டியின் சாம்பியன்ஷிப் மற்றும் சேலஞ்ச் பிரிவுகளில் பங்கேற்கும் 54 கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக  பந்தயம் நடைபெறும் களங்களுக்கு சென்றது. முன்னதாக ஜென்னீஸ் ரெசிடெண்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இந்த ரேலியை விளம்பரப்படுத்தும் ப்ளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மண்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் பிரேம்நாத், பந்தய வீரர்கள் கௌரவ் கில், கர்ணா கடூர், ஆதித்யா தாக்குர், பாபிட் அமர், ஷிவானி ப்ருத்வி மற்றும் சாம்ராட் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கோவையில் செயல்படும் தங்கள் நிறுவனம் இந்த சிறப்புமிக்க கார் பந்தயத்தை கோவையில் இந்த ஆண்டு நடத்துவது தங்களுக்கு பெருமிதமாக இருப்பதாக ப்ளூ பேண்ட் நிறுவனத்தின் இயக்குனர் பிரேம்நாத் கூறினார். இம்முறை முதல் ஸ்டேஜில் அமைக்கப்பட்டுள்ள 27 கிலோமீட்டர் தடம்  சமீப காலத்தில் எங்கும் பார்த்திராத அளவு கொண்டதாக இருக்கும் என்றார். 

இந்த பந்தயம் நிச்சயமாக ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் என்று தான் நம்புவதாகவும், வரும் காலங்களில் இந்த விளையாட்டுக்கு மக்களிடையே பேராதரவு அதிகம் கிடைக்கும் எனவும் தான் உறுதியாக நம்புவதாக கூறி, அணைத்து வீரர்களுக்கும் ப்ளூ பேண்ட் சார்பில் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய வீரர் கவுரவ் கில், இம்முறை பந்தயத்தில் உள்ள இரண்டு ஸ்டேஜுகளில் மென்மையான, கரடுமுரடான இரண்டு தடங்கள் இருப்பதால் நிச்சயம் வாகனத்தை ஓட்டும் போது இந்த இரு தடங்களுக்கு ஏற்ப ஒரு ஓட்டுனர் தன் சமநிலையை சீராக வைக்கவேண்டியிருக்கும் என்றார். 

தன்னுடைய  தேசிய ரேலி அனுபவத்தில் ஒரு ஸ்டேஜில் 27 கிலோமீட்டர் ஓட்டப்போவதே இதுவே முதல் முறை என்றார். இந்த தடத்தை ரேலியின் அமைப்பாளர்கள் மிக நேர்த்தியாக செய்திருக்கின்றனர் என்று தெரிவித்தார்.  அவருக்கு பின்னர் பேசிய ஆதித்யா தாக்குர் தான் கிராஸ் கண்ட்ரி ரேலிகளில் பங்கேர்த்த அனுபவத்தில் இதை விட கரடுமுரடான பந்தயசாலைகளில் ஓட்டி இருப்பதால் இந்த இரு தடங்களும் மென்மையானதாக தான் பார்ப்பதாக தெரிவித்தார். 

மற்ற அணைத்து வீரர்களும் இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதை பெருமையாக பார்ப்பதாகவும், தங்கள் போட்டியிடும் பிரிவில் தங்களுடைய திறமையை வெளிக்காட்ட ஆவலாக உள்ளதாக தெரிவித்தனர். கார் பந்தயம்  நாளை, நாளை மறுநாள் (ஜூலை 30, 31)   வெள்ளலூர் ஜி ஸ்கொயர் சிட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும், கேத்தனூர் பகுதியில் உள்ள காற்றாலை பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பந்தய சாலையிலும் நடைபெறும். வெற்றிபெறும் வீரர்களுக்கு ஞாயிறு பிற்பகல் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

- சீனி,போத்தனூர்.

Comments