ஆடி அமாவாசையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குபேரீஸ்வரர்!!

    -MMH 

ஆடி அமாவாசையை ஒட்டி கோவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ குபேரீஸ்வரர் அருள்பீடத்தில் சிறப்பு வேள்வி யாகம் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு சிறப்புகளை கொண்ட மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் மிகவும் சிறப்பு மிக்க நாளாக விளங்குகின்றது. 

எந்த ஒரு காரியத்தையும் தொடங்க மிகச்சிறந்த நாளாக உள்ள இந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ குபேரீஸ்வரர் அருள் பீடத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.அதன் படி இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினத்தையொட்டி சிறப்பு வேள்வி யாகம் அருள் பீட வளாகத்தில் நடைபெற்றது. ஸ்ரீ குபேரீஸ்வரர் அருள் பீடம் சிவ திரு ஸ்ரீ பிரசன்ன சாமிகள் தலைமையில் நடைபெற்ற யாக வேள்வியை ஓதுவார் சங்க மாநில தலைவர் கங்காதர தேசிகர் துவக்கி வைத்தார். 

மாங்கல்ய பலம், திருமண தடை நீங்க, புத்திர பாக்கியம் பெற என அனைத்துலக பொதுமக்களின் நலன் வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து சிவதிரு ஸ்ரீ பிரசன்ன சாமிகள் கூறுகையில், பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆடி அமாவாசை தினத்தில் நடைபெறும் இந்த யாகம், உலக நலன் வேண்டி நடைபெறுவதாகவும், 

இதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், சுவாமி அருள் வளையல் வழங்கி சிறப்பித்து, அன்னதானம் நடைபெறுவதாக தெரிவித்தார். தேவார, திருவாசக பாடலை பாடி சிவபெருமான் அருள் பெற பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடைவதாகவும், இதனால் முன்னோர்களின் புண்ணியத்தை பெறும் சிறப்பு இந்த யாகத்தில் இருப்பதாக கூறினார். இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் கணபதி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments