பயன்பாடின்றி கிடக்கும் பஸ் நிலையம்! ஜவுளி சந்தைக்கு ஒதுக்கப்படுமா?!

 

-MMH

ஏழு ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்ட், விசைத்தறி ஜவுளி சந்தைக்கு ஒதுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம் அருகே காரணம்பேட்டையில், 2015ல், 1.78 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. நால் ரோட்டில் இருந்து ஒரு கி.மீ., துாரம் தள்ளி இருப்பதால், பஸ் ஸ்டாண்ட் பயன்படுத்த பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. பொதுமக்கள் வராததால், பஸ்களும் நால் ரோட்டிலேயே திரும்பி சென்றன.இதனால், பஸ் ஸ்டாண்ட், ஏழு ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கால்நடை சந்தை, உள்ளிட்ட மாற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கையும், எழுத்து வடிவில் மட்டுமே உள்ளன.  பல்லடம் பகுதி விசைத்தறியாளர்கள் சிலர் கூறியதாவது: விசைத்தறிக்கு ஜவுளிச்சந்தை அமைக்க ஐந்து ஆண்டுக்கு முன்னரே, ஒப்புதல் பெறப்பட்டது. இதற்காக, இடத்தை விசைத்தறியாளர்கள் தங்களது பங்களிப்பு மூலம் வாங்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள தொழில் நிலையில், இடத்தை வாங்குவது விசைத்தறி உரிமையாளர்களால் இயலாது.

இதுதவிர, வீட்டு மனைகள் லட்சக்கணக்கில் மதிப்பு உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்கள் இடத்தை வாங்குவது சிரமமான காரியம். ஜவுளி சந்தை உருவாக்க அரசே இடத்தை வழங்கி உதவ வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.அதன்படி, பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் ஜவுளிச்சந்தை அமைக்கும் பட்சத்தில், விசைத்தறியாளரின் கோரிக்கை எளிதில் நிறைவேறும். காரணம்பேட்டை வளர்ந்து வரும் பகுதி என்பதால், ஜவுளிச்சந்தை அமைந்தால், தொழிலும் வளர்ச்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments