கோவையில் பைக் திருட்டை குறைக்க புது திட்டம்!

    -MMH 

கோவை:கோவையில் செயல்படும் வாகன நிறுத்தங்களை முறைப்படுத்தும் நோக்கத்துடன், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கொண்ட கூட்டத்தை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர். வாகன நிறுத்தங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மூலம் பைக் திருட்டு சம்பவங்களை குறைக்க முடியும் என்று போலீசார் நம்புகின்றனர்.

கோவை மாநகரில் 50க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தங்கள் உள்ளன. தனியார் சார்பில் நடத்தப்படும் வாகன நிறுத்தங்கள், மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மூலம் நிர்வகிக்கப்படும் நிறுத்தங்கள், ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் வாகன நிறுத்தம் ஆகியவற்றில், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.கோவை அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள், ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. 

இவ்வாறு செயல்படும் வாகன நிறுத்தங்களுக்கு கண்காணிப்பு, கட்டுப்பாடு என்று எதுவும் கிடையாது. வாகனங்களை திருடுவோர், இத்தகைய வாகன நிறுத்தங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் திருடர்களை கண்டுபிடிக்கவும், திருடப்பட்ட வாகனத்தை மீட்பதும், போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கத்துடன், வாகன நிறுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொண்ட கூட்டத்தை நடத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.

போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:கோவையில் அதிக எண்ணிக்கையில் வாகன நிறுத்தங்கள் உள்ளன. அவற்றின் வெளிப்படையான செயல்பாட்டுக்கு, ஒரு குறைந்தபட்ச ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கென வாகன உரிமையாளர்கள், வாகன நிறுத்த நிர்வாகிகளின் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு வாகன நிறுத்தத்திலும் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

வாகனத்தை கொண்டு வந்து நிறுத்துபவர் மற்றும் வாகனத்தை எடுத்துச் செல்பவர் முகம், தெளிவாக பதிவாகும் வகையில் கேமரா பொருத்தப்பட வேண்டும்.தினமும் நிறுத்தப்படும் வாகனங்களின் பட்டியல் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் எடுக்கப்படாத வாகனங்களின் எண் விவரமும், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கால தாமதமாக வாகனங்களை எடுக்க வருபவர்களை விசாரித்து, சரி பார்த்த பிறகே வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும்.வாகன திருட்டு சம்பவங்களை முற்றிலும் தடுக்கும் நோக்கத்துடன், இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments