சித்திரைச் சதயம் குரு பூஜை இன்று!!

 -MMH 

வேலூர் மாவட்டத்திலே அப்பர் அடிகளை மூலவராக கொண்டு அமைந்துள்ள ஆலயம் இங்கு மட்டுமே உள்ளது.

உலக வரலாற்றில் மன்னர் ஆட்சியை எதிர்த்து 15 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு தான் கிளர்ச்சிகள் தோன்றின. அமெரிக்காவிலும், பிரான்சிலும் 17ம் நூற்றாண்டின் இறுதியிலும், ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டில் தான் மக்கள் புரட்சி மன்னர்களை எதிர்த்து தோன்றியது. ஆனால் தமிழகத்தின் அப்பர்ரடிகள் 7ம் நூற்றாண்டிலேயே பல்லவ பேரரசை எதிர்த்து மனித குலத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர்.

மனிதன் அரசுக்கு அடிமையல்ல,அதிலும் சமயம் தனி மனிதனின் விருப்பதை பொறுத்தது. இதில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அப்பரடிகள் 7ம் நூற்றாண்டிலேயே உரிமை முழக்கம் செய்து வெற்றியும் பெற்றவர்.

அப்பர் தீண்டாமையை எதிர்த்தவர்,மூடத்தனமான சடங்குகளை எதிர்த்தவர்,பன்னிரு திருமுறைகளில் 4,5,6 ஆம் திருமுறைகளை அருளிச் செய்தவர். தமிழ் நெறிக்கு புத்துயிர் அளித்தவர்.

தொண்டைமண்டலத்தில் திருவாமூரில் அப்பரடிகள் தோன்றினார், அவர் பிறந்த குல மரபு சைவ வேளாளர். 100 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சத்துவாச்சாரியில் வேளாளர் வீதியில் வாழ்ந்த ஒருவர், அப்பரின் தீவிர பக்தர், தான் வசித்த இல்லத்தையே அப்பர் மடம் என பெயரிட்டு, அவர் வார்ப்பு உருவ சிலையை வைத்து வழிபாடு தொடங்கியுள்ளார், தனக்கு பின்னர் அந்த மடத்தை தானமாக வழங்கியுள்ளார். 



பராமரிப்பு இல்லாது போன இந்த மடத்தை சமீபத்தில் அந்த தெரு மக்கள் இணைந்து வழக்கறிஞர் நித்தியானந்தம் தலைமையில் பெரும் பொருள் செய்து அதே இடத்தில் அப்பரடிகள் மூலவராக அமைத்து ஒரு தனி ஆலயம் அமைத்துள்ளனர் என்பது சிறப்பு தகவல்.

எல்லா நாயன்மார்கள் சுதை சிற்பமாக வரிசையாக வண்ண கோலத்தில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. நாடெல்லாம் பயணம் செய்து, திருக்கோயில்களை உழவரம் செய்வதையே தன் தொண்டாய் வாழ்ந்து காட்டியவர் அப்பரடிகள்.

சமயத் தொண்டாற்றி தனது 81வது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார். அதிர்வலைகள் உணர கூடிய இவ்வரிய தலத்தை சென்று தரிசிக்கலாமே.

மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும், மூசு வண்டரை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி நிழலே         -அப்பர்.

-P. இரமேஷ், வேலூர்.

Comments