கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா!!

         -MMH 

கோவை, குனியமுத்தூர் பகுதியி்ல் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பில் உள்ள அனைத்து பாடப்  பிரிவுகளில் 2022 கல்வி ஆண்டில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்  இயக்குநர் கவிதாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வாழ்த்தி பேசினார். இதில் அவர் பேசியபோது, புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் முதல் வருடத்திலேயே திட்டமிட்டு குறிக்கோளை நிர்ணயித்து கல்லூரி படிப்பை தொடங்க வேண்டும். 

உங்கள் குறிக்கோளை அடைய நல்ல நட்பினை தேர்வு செய்யுங்கள். முயற்சி செய்து எந்த செயலை செய்தால் நிச்சயமாக வெற்றி இலக்கை அடைய முடியும். வாழ்க்கையில் முன்னேற கடின உழைப்பே மிகவும் அவசியம். எண்ணிய இலக்கை அடைந்து பெற்றோர்களை கடைசிவரை காப்பாற்றுங்கள் எனக் கூறினார்.

இதனிடையே நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் நிர்வாக அறங்காவலரான எஸ்.மலர்விழி தலைமை வகித்து மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியபோது, மாணவர்கள் கல்லூரியில் உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்துங்கள். படிப்புடன் பல்வேறு திறமைகளை வளர்க்க வேண்டும். 

நமது வாழ்க்கையை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். நாம் எப்படி வரவேண்டும் என்பதை இப்பொழுது தீர்மானிக்க வேண்டும். படித்து முடித்து தான் படித்த கல்லூரி மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். கடினமாக உழைத்து. சுயமாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளம் பருவத்தில் எது சரி, தவறு என்பதை உணர்ந்து நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரைகள் வாழ்க்கையில் முன்னேற பின்பற்றுங்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன அறங்காவலர் கே.ஆதித்யா, முதன்மை செயல் அதிகாரி கே..சுந்தரராமன் மற்றும்  இக் கல்லூரியின்  துணை முதல்வர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை டீன் கே.எஸ்.ஜீன் மார்சலின் வரவேற்றார். மேலாண்மை அறிவியல் டீன் பி.ராஜன் நன்றி கூறினார்  இந்நிகழ்வில் பேராசிரியர்கள், புதிதாக சேர்ந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments