பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது! தூத்துக்குடியில் கோலாகலம்!!

   -MMH 

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார். 

இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. 11-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பனிமய மாதா பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான குமார் ராஜா, உதவி பங்குத்தந்தை பால் ரோமன், களப்பணியாளர் பெல்கிளின்டன், மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-வேல்முருகன்,தூத்துக்குடி.

Comments