காகித வடிவில் கட்டட விண்ணப்பம் ஏன்? மாநகராட்சிக்கு நகராட்சி நிர்வாக இயக்குனர் கேள்வி!!

      -MMH 

கோவை : கட்டட அனுமதி வழங்க, காகித வடிவில் விண்ணப்பம் பெறுவது ஏன்; 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறதா என்பது உட்பட, 12 கேள்விகள் கேட்டு, மாநகராட்சி கமிஷனர்களுக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.

கோவை நகரில், 10 ஆயிரம் சதுரடிக்குள் குடியிருப்பு, 2,000 சதுரடிக்குள் வணிக கட்டடம் கட்டுவதாக இருப்பின், மாநகராட்சியில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். இருப்பிடத்தில் இருந்தே விண்ணப்பித்து, 30 நாட்களுக்குள் அனுமதி பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு, ஆன்-லைனில் விண்ணப்பித்தாலும், காகித வடிவிலும் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

லஞ்சம் கொடுக்காவிட்டால், கோப்புகள் கிடப்பில் போடப்படுகின்றன. ஏராளமான கோப்புகள், மாநகராட்சி அலுவலகத்தில் தேங்கியுள்ளன, இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு புகார் சென்றது.இதைத்தொடர்ந்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா, அனைத்து மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள், நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு:

கட்டட அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான கால அளவை குறைக்கவும், இணைய தளம் வாயிலாக செலுத்தும் வசதிகளுடன் கூடிய மென்பொருள் உருவாக்கி, அதன் வாயிலாகவே பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெற்றாலும், காகித முறையிலும் விண்ணப்பங்கள் பெறுவது தெரியவந்துள்ளது.

கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக மட்டுமே பெறப்படுகிறதா; காகித முறையிலும் பெறப்படுகிறதா; இணைய தளம் வாயிலாக கட்டட அனுமதிக்கு இணையாக கோப்புகள் பராமரிக்கப்படுகிறதா; இடம் ஆய்வு செய்த, 48 மணி நேரத்துக்குள் ஆய்வறிக்கை பதிவேற்றம் செய்யப்படுகிறதா; 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறதா? கட்டட பணி முடிந்த பின், வரி விதிப்பு செய்ய, அதற்கான அறிக்கை வருவாய் பிரிவுக்கு அனுப்பப்படுகிறதா என்பதற்கான பதில்களை, வரும், 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார். நகரமைப்பு பிரிவினரின் செயல்பாடுகளை துல்லியமாக அறியும் வகையில் கேள்விகளுக்கு பதில் கேட்கப்பட்டுள்ளது. இது, மாநகராட்சி அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்திரன்.

Comments