சிறுவனை காணாததால் பெற்றோர் பதற்றம்!! இறந்த நிலையில் மீட்பு!!

ஈரோடு மாவட்டம், வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). இவர் மாணிக்கம் பாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை காலை ஹேமச்சந்திரன் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த ஹேமச்சந்திரனின் பெற்றோர், உற்றார் உறவினர்- வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இதற்கிடையே பள்ளியில் விசாரித்தபோது வகுப்புகள் முடிந்ததும் ஹேமச்சந்திரன் கிளம்பி சென்றது தெரிய வந்தது. இதன் பின்னர் அவரது பெற்றோர் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன ஹேமச்சந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில், கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தின் கரையில் பள்ளி சீருடை கிடப்பதாக காவல்துறயினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினரின் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர்.

நேற்று அதிகாலை சுமார் 1 மணியளவில் மாணவர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில், பள்ளி முடிந்ததும் ஹேமச்சந்திரன் கருவில்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றதும், ஆழமான பகுதிக்கு சென்ற மாணவர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது.

-வேல்முருகன், சென்னை.

Comments