கோவில்பட்டி மெயின்ரோட்டில் பாலத்தில் மோதி லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!

  

தூத்துக்குடியில் இருந்து ஆலங்குளத்திற்கு சாம்பல் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்தது. லாரியை மதுரையைச் சேர்ந்த டிரைவர் கலைச்செல்வம் ஓட்டி வந்தார். கோவில்பட்டி மெயின் ரோடு மாதாங்கோவில் தெரு, மார்க்கெட் ரோடு சந்திப்பில் வந்து கொண்டிருந்த போது சிறிய பாலத்தில் லாரி திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில் டயர் வெடித்து சிதறியதுடன் லாரி பாதி சாய்ந்த நிலையில் ரோட்டின் மறித்துக் கொண்டு பாலத்தில் சிக்கி கொண்டது.

இதனால் அப்பகுதியில் வந்த பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களில் வேலைக்கு சென்றவர்கள், மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர்கள் ஏராளமானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒரு வழி பாதையில் மாற்றி விட்டு போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் இந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பொதுமக்கள் கோரிக்கை இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே இந்த இடத்தில் குறுகலாக பாலம் அமைக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தோம். போக்குவரத்து நெரிசல் மிக்க இந்த பகுதியில் பாலத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, இப்பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments