லிஃப்ட் கேட்டு கை நீட்டுபவர்களிடம் கவனம்!! செல்போன் பறிப்பால் உயிரிழப்பு!!
கோவை சத்தி ரோட்டில் வாட்டர் டேங்க் கார்னரில் வண்டியில் வந்த வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரிடம் 20 வயது மதிக்கத் தகுந்த இளைஞன் ஒருவன் காலை 11 மணியளவில் லிஃப்ட் கேட்டுக் கை நீட்ட அவர் வண்டியை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் எனக் கேட்கும் முன்பு அவர் சட்டைப் பையிலும் உடலிலுமாகச் சேர்ந்து பிளேடு போட்டு செல்போன் மற்றும் பர்சை எடுத்துக் கொண்டு அவர் கன்னம் வீங்குமளவு அவரை அறைந்து விட்டுத் தப்பி ஓட அவனை விரட்டிச் சென்று பிடித்துத் தர்ம அடி கொடுத்துப் போலீஸில் ஒப்படைத் திருக்கின்றார்.
சூலூரில் இரவு வண்டியில் லேட்டாக வீடு திரும்பியவரை வழி மறித்த இருவர் அவர் மீது தாக்குதல் நடத்தி அவர் கீழே விழுந்ததும் வண்டியைப் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டனர்.
கோவையில் என்ஜினீயரிங் மூன்றாமாண்டு படிக்கும் தமிழ்ச் செல்வன் தனது கல்லூரிப் பிராஜக்ட் சம்பந்தமாகத் தனது நண்பருடன் பேசிவிட்டு இரவு பன்னிரண்டு மணியளவில் அரசூரில் உள்ள தனது வீட்டருகில் நடந்து வந்திருக்கிறார். அங்கு காத்திருந்த இருவர் அவரைத்தாக்கி அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போனைப் பறிக்க முயல அவர் சத்தம் போட்டிருக்கிறார் . ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் அவரது இடது மார்பில் குத்தி விட்டு செல்போனுடன் ஓடி விட்டனர். மார்பைப் பிடித்தபடி வீட்டுக்கு வந்த தமிழ்ச் செல்வன் மருத்துவ மனை செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.
வேலையில்லாமல் போதைக்கு அடிமையான பல இளைஞர்களும், வேலை செய்ய இரயில்களில் வந்திறங்கும் வட இந்திய ஆட்களும் கோவையையும் திருப்பூரையும் தற்போது கொலைக்களமாக மாற்றி வருகின்றனர். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று காவல் துறையினர் எச்சரிக்கிறார்கள்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்தந்த காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
-துல்கர்னி உடுமலை.
Comments