கோவையில் களை கட்டிய புத்தகத் திருவிழா! விழா ஏற்பாட்டாளர்களை குளிர்வித்த கோவை மக்கள்!!

     -MMH 

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நடந்த கோவை புத்தகக் கண்காட்சியை, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்; புத்தக விற்பனை மூன்று கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கோவை கொடிசியா அமைப்பு, பதிப்பகங்களுடன் இணைந்து, 2015லிருந்து, புத்தகக் கண்காட்சியை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில், கோவை மாவட்ட நிர்வாகமும், கரம் கோர்த்தது.

கடந்த மாதம் 22ம் தேதி துவங்கிய கண்காட்சியில், 150 பதிப்பகங்கள் சார்பில், மொத்தம் 280 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு மொழிகளின் பல லட்சம் புத்தகங்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. வாசிப்புக்கான ஆர்வம் பெரிதும் குறைந்து விட்டது என்று படைப்பாளிகள், இலக்கியவாதிகள் பலரும் கவலை கொண்டிருந்த சூழ்நிலையில், கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நடக்காத இந்த கண்காட்சிக்கு, எப்படி வரவேற்பு கிடைக்குமோ என்று பலரும் அச்சமடைந்தனர். 

ஆனால் கோவை மக்கள், வாசிப்பில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில், தினமும் அரங்குகளில் திரண்டனர். புத்தகங்களை வாங்கிக் குவித்தனர்.ஜூலை 31ம் தேதியன்று, கண்காட்சி நிறைவடைந்தது. 10 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியை, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர். 2019ல் நடந்த புத்தகத்திருவிழாவில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆண்டில் அது இரட்டிப்பாகியுள்ளது. அதேபோன்று, அப்போது ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தக விற்பனை நடந்தது. அது இப்போது மூன்று கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ஆறாவது புத்தகத் திருவிழாவின் தலைவர் விஜய ஆனந்த் கூறுகையில், ''நாங்கள் இந்த வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. அறிவைத் தேடுவதில் சலிக்காதவர்கள் கோவை மக்கள் என்பதை, மீண்டும் நிரூபித்து விட்டனர். அடுத்த ஆண்டில் இன்னும் சிறப்பாக, இந்த கண்காட்சியை நடத்துவதற்கான உற்சாகம் எங்களுக்குக் கிடைத்துள்ளது,'' என்றார்.வாங்கப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி!புத்தகத்திருவிழா... திருத்த வேண்டிய பிழைகள்!

பள்ளிக்குழந்தைகளை, புத்தக அரங்கங்களைப் பார்ப்பதற்கு அனுமதித்ததில் சரியான ஒழுங்கு முறை கடைப்பிடிக்கப் படவில்லை. அதனால் புத்தகங்களை வாங்க வந்தவர்களால், பல அரங்கங்களைப் பார்வையிட முடியவில்லை. பல நேரங்களில் ஏ.சி., இல்லாததால், கூட்ட நேரங்களில், பார்வையாளர்கள் வியர்வையில் நனைய வேண்டியிருந்தது. குடிநீர் வசதியும் போதியளவில் செய்யப்படவில்லை. புட்கோர்ட்டில் கடை எண்ணிக்கை குறைவாகவும், உணவு விலை மிக அதிகமாகவும் இருந்ததாகவும் புகார் இருந்தது.

அதேபோன்று, கண்காட்சியின் முன் பகுதியில் இருந்த அரங்குகளில், புத்தக விற்பனை மிக அமோகமாக இருந்ததாகவும், பின் பகுதியில் இருந்த அரங்குகளில், விற்பனை குறைவாக இருந்ததாகவும், பதிப்பகத்தார் சிலர் வருத்தம் தெரிவித்தனர். அனுமதி இலவசம் என்பதால், மேலும் பல வாயில்களைத் திறக்க அனுமதித்திருந்தால் பின்னால் இருந்த அரங்குகளிலும் விற்பனை அதிகரித்திருக்கு மென்று, கருத்துத் தெரிவித்தனர். அடுத்த கண்காட்சியில் இவற்றைச் சரி செய்வது அவசியம்!

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-சுரேந்தர்.

Comments