கோவையில் எதிர் உயிரி வைரஸ் பரிசோதனை மையம்! சிட்ரா முதன்மை விஞ்ஞானி தகவல்!!

    -MMH 

    கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகத்தில்(சிட்ரா), ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர் (எதிர் உயிரி வைரஸ் பரிசோதனை மையம் ) மற்றும், 25 கோடி ரூபாய் செலவில், மருத்துவ உபகரணங்கள் பரிசோதனை மையம் ஆகியவை அமைகிறது. மருத்துவத்துறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும், பொருட்களில் பெரும்பாலானவை ஜவுளியோடு இணைந்துள்ளன.

அந்த வகையில், 54 மருத்துவ ஜவுளிப்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன.மருத்துவ ஜவுளிப்பொருட்கள் சுத்தமாக, எவ்வித நுண் உயிரிகளும் தாக்காத வகையில் இருப்பது அவசியம். இப்பொருட்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்துவதற்கு தகுதியானவைதானா என்பதை பரிசோதித்து, தரச்சான்று அளித்தால் மட்டுமே, அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். இப்பொருட்களை பரிசோதனை செய்து, சான்றளிப்பதற்காக புனேயில் உள்ள 'தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) மற்றும் திருவனந்த புரத்திலுள்ள ராஜீவ் காந்தி உயிர் தொழில்நுட்பவியல் மையம் ஆகிய இரண்டு மட்டுமே, நம் நாட்டில் உள்ளது.

இந்த வரிசையில், கோவையிலுள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழக வளாகத்தில்(சிட்ரா) எதிர் உயிரி வைரஸ் பரிசோதனை மையத்தை (ஆன்டி வைரல் டெஸ்டிங் சென்டர் ) அமைப்பதற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திடம், ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. விரைவில் பரிசோதனை மையம் கோவையில் அமையும் என்கிறார், சிட்ரா முதன்மை விஞ்ஞானி சிவக்குமார்.              

அவர் மேலும் கூறுகையில், ''இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS) மற்றும் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் சார்பில், எதிர் உயிரி வைரஸ் பரிசோதனை மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தில், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் பி.பி.இ.,கிட் முதல் அனைத்து வகையான மருத்துவ ஜவுளிப்பொருட்களும், பரிசோதனை செய்யப்பட்டு தரச்சான்று அளிக்கப்படும். அதன்பின்பே, அவை விற்பனைக்கும் பயன்பாட்டிற்கும் அனுமதிக்கப்படும்,'' என்றார்.

மருத்துவ ஜவுளி தயாரிப்பாளர்கள் கூறுகையில், 'இந்த மையம் கோவையில் அமைவது, இந்நகரின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு அளித்துள்ள மிகப்பெரிய ஊக்குவிப்பு. இம்மையத்தால், கோவை மட்டுமல்லாமல் சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள் அனைத்தும் பயனடையும். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த, மத்திய அரசுக்கு நன்றி' என்றனர்.

நாளை வரலாறு செய்திகளுக்காக  

கோவை மாவட்ட தலைமை நிருபர்            

-சி.ராஜேந்திரன்.

Comments