பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடை அகற்றப்படுமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்!!

   -MMH 

கருவம்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அனைத்து கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். கடையை அகற்றாவிட்டால் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திருப்பூர், கருவம்பாளையம், கே.வி.ஆர்., நகர் பிரதான ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை (எண்: 1927) உள்ளது. கடைகள், வீடுகள் உள்ள பிரதான ரோட்டில் உள்ள இக்கடைக்கு வரும் 'குடி'மகன்கள் ரோட்டில் போதையில் விழுந்து புரள்வது; அசுத்தம் செய்வது என பல வகைகளில் மக்களுக்கு தொந்தரவு செய்கின்றனர்.

மதுக்கடையை அகற்ற வேண்டும் என பல ஆண்டாக இப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல முறை போராட்டம் நடத்தியும், நடவடிக்கை இல்லை. மதுக்கடையை மூட வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதியில் அ.தி.மு.க., - பா.ஜ., - ம.தி.மு.க., - காங்., - ஹிந்து முன்னணி பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.,), சாந்தாமணி (ம.தி.மு.க.,) ஆகியோர் தலைமையில் மதுக்கடை முன் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுக்கடை முன் உதவி கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோருடன் போலீசார் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலெக்டரிடம் சென்று முறையிடுவதாக புறப்பட்டு சென்றனர். 

கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கூறுகையில், ''இதுவரை, 10 முறை போராட்டம் நடந்துள்ளது. 20 முறைக்கு மேல் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இன்னும், 10 நாட்களுக்குள் இந்த கடை அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் அனைத்து கட்சி சார்பில் நடத்தப்படும்'' என்றார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments