வாகனங்களால் திணறும் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம்! பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!!

     -MMH 

திருப்பூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தை சுற்றிலும் நிறுத்தப்படும் வாகனங்கள் அவதியை ஏற்படுத்துகிறது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் பின்புறம், ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகம் உள்ளது. மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட், முதல் மற்றும் 2வது கூடுதல் மாவட்ட கோர்ட், மகிளா கோர்ட், வாகன விபத்து இழப்பீடு வழக்கு சிறப்பு கோர்ட், மாவட்ட உரிமையியல் கோர்ட், குடும்ப நல கோர்ட், சப்-கோர்ட் மற்றும் கூடுதல் சப் கோர்ட், முதன்மை குற்றவியல் நடுவர் கோர்ட், 1 முதல் 4 வரையிலான மாஜிஸ்திரேட் கோர்ட்கள், விரைவு கோர்ட் ஆகியன செயல்படுகின்றன. 

சமரச தீர்வு மையம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஆகியனவும் இங்கு உள்ளன.கோர்ட்களின் நீதிபதிகள் சேம்பர், கோர்ட் அலுவலகங்கள், நிர்வாக அலுவலகம், பார் அசோசியேசன், கூட்ட அரங்கு, வழக்கு பறிமுதல் பொருள் பாதுகாப்பு அறை, பதிவறை உள்ளிட்டவை உள்ளன.இங்கு பணியாற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், அலுவலர்கள், ஊழியர்கள், வழக்குதாரர்கள், போலீசார் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இந்த வளாகத்தில், நீதிபதிகள் வாகனங்கள் நிறுத்தும் வகையில் கேரேஜ்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இது தவிர மற்றவர்கள் வரும் வாகனங்கள் கோர்ட் வளாகத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வளாகத்தைச் சுற்றிலும் கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள், வழக்கு விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அழைத்து வரும் போலீசார் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படுகின்றன. ஒரு சில நாட்களில் அதிகளவிலான வழக்கு விசாரணைகள் நடைபெறும் போது, பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் வருகின்றன.

இந்த வாகனங்கள் கோர்ட் வளாகம் பகுதியில் நிறுத்த இடமின்றி, வளாகத்துக்கு வரும் ரோட்டில் இருபுறமும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த ரோட்டில் தான் மாவட்ட போலீஸ் எஸ்.பி., வளாகம், விருந்தினர் மாளிகை, அரசு அலுவலர் குடியிருப்பு போன்றவையும் உள்ளன.இவற்றுக்கு வந்து செல்லும் வாகனங்கள், கோர்ட்டுக்கு வரும் வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுவதால் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.உயர் அதிகாரிகள், வி.ஐ.பி.,க்கள் அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் போது சிக்கலையும் இது ஏற்படுத்துகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-திருப்பூர், பாஷா.

Comments