ஆட்டோவில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை!! ஆட்டோ டிரைவரை கைது செய்து காவல்துறைை நடவடிக்கை!!

  -MMH 

கோவையில், நள்ளிரவில், ஆட்டோவில் பயணித்த இளம்பெண், பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற டிரைவரின் செயலால், சாலையில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஈரோடு, கோட்டை பகுதியை சேர்ந்த, 22 வயது பெண், கோவை செல்வபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28ம் தேதி, திருப்பூரிலிருந்து வந்த அவர், ஹோப் காலேஜில் இருந்து செல்வபுரம் செல்ல, 'ஆன்லைன்' வாயிலாக, 'ரேபிடோ' ஆட்டோ பதிவு செய்து பயணித்தார். 

அப்போது, ஆட்டோ டிரைவர் பெண்ணிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். அதிர்ச்சியடைந்த பெண் சப்தமிட்டு, வாகனத்தை நிறுத்துமாறு கூறியும், கண்டுகொள்ளாத டிரைவர், வேகமாக இயக்கியுள்ளார். சுதாரித்த பெண், அவிநாசி சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே, ஆட்டோவில் இருந்து கீழே குதித்தார். வாகனத்தை நிறுத்தாமல் ஆட்டோ டிரைவர் தப்பினார். 

தலையில் காயமடைந்த பெண், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த பீளமேடு போலீசார், மருத்துவமனை சென்று பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த புகாரின் படி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல் உட்பட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

தொடர்ந்து, பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற, கோவை, உக்கடம், அருள் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சாதிக் - 43 என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments