நெடுஞ்சாலைத்துறை மற்றும் சூயஸ் நிறுவனத்தின் இடையே சரியான புரிதல் இல்லாததால் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்!!

    -MMH 

மோசமாக உள்ள மருதமலை சாலையை சீரமைக்க முடியாததற்கு, சூயஸ் நிறுவனம் சான்று தராததே காரணம் என, மாநில நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. கோவை, மருதமலை ரோட்டில், பி.என்.புதுார்- வடவள்ளி இடையிலான பகுதியில் இரண்டு கி.மீ., துாரத்துக்கு, குடிநீர்த் திட்டத்துக்கான குழாய் பதிப்பதற்காக, ரோடு தோண்டி மூடப்பட்டுள்ளது. 

ஆனால் ரோடு சீரமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் இருந்த மண் ரோடு, மழை காரணமாக குழி, மேடாக மாறி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. டூ வீலர்கள், கார்கள், லாரிகள், பஸ்கள் அனைத்துமே, ஒற்றை வழிச்சாலையாக மாறிவிட்ட தார் ரோட்டில், ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

இந்த ரோட்டைக் கடந்தே வடவள்ளி, தொண்டாமுத்துார், மருதமலை போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருப்பதால், காலை மற்றும் மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களில் இரவிலும் கூட, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் இந்த ரோட்டை விரைவாகச் சீரமைத்துத் தர வேண்டுமென்று, கோவை மேற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பல வாரங்களாகியும் ரோடு சீரமைப்புப் பணி துவங்கவேயில்லை. 

இதுபற்றி, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 'பி.என்.புதுார் பகுதியில், 24 x 7 குடிநீர்த் திட்டத்துக்கு குழாய் பதிக்கும் பணியை சூயஸ் நிறுவனம் மேற்கொண்டது. ஆனால் பணி முடிந்து சான்று தராததால்தான், அந்த ரோட்டைச் சீரமைக்க முடியவில்லை' என்றனர்.ரோட்டைச் சீரமைப்பதற்கான தொகையை சூயஸ் நிறுவனம் டெபாஸிட் செய்துவிட்டது. 

ஆனால், பணியை முடித்ததாக சான்று தராவிட்டால், டெண்டர் விட முடியாது; அதற்கு அப்ரூவல் கிடைக்காது என்பது, இத்துறை பொறியாளர்களின் பதிலாக உள்ளது.  இதுபற்றி, சூயஸ் நிறுவனத்தின் 24 x 7 குடிநீர்த் திட்ட ஆலோசகர் கோபால கிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''அங்கு இன்னும் பணி முடியவில்லை. போலீஸ் அனுமதி கிடைக்காததால், இரவில் மட்டுமே பணி நடக்கிறது. விரைவில் பணி முடித்து சான்று தரப்படும்,'' என்றார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதேபோல, இந்த ரோட்டை ஒட்டியுள்ள வீதிகளிலும், குழாய் பதிக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. அனைத்து வீதிகளிலும் ஒரே நேரத்தில் ரோடுகள் தோண்டப் பட்டிருப்பதால், எந்த ரோட்டிலுமே வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு, சாலை பழுதடைந்து காணப்படுகிறது. எனவே, அனைத்து சாலைகளையும் விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Comments