சிங்காநல்லூர் சிக்னலில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்!! இதற்கு ஒரு விடிவு பிறக்காதா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

  -MMH 

கோவை மாநகரில் சிங்காநல்லூர் ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் இருந்து கோவையின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நெரிசலாகவும் இருக்கும். பண்டிகை காலங்களில் இந்த பேருந்து நிலையத்தில் நிற்க  கூட இடம் இல்லாதபடி கூட்டம் அலைமோதும்.

சமீபத்தில் திருச்சி சாலையில், ராமநாதபுரம் சிக்னலை தாண்டி செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல் சிங்காநல்லூர் சிக்னலை கடந்து செல்லும் வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இங்கு மேம்பாலம் இல்லாத காரணத்தால் காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னல் மற்றும் திருச்சி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் சிங்காநல்லூர் உழவர் சந்தை துவங்கி, ஒண்டிப்புதூர் பாலத்தை கடக்கும் வரையில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

திருச்சி சாலையும் அகலப்படுத்தப்படாமல் இருப்பதால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலில் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இதனிடையே உடனடியாக சிங்காநல்லூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments