460 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 3பேர் கைது : தனிப்படை போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!

 

    -MMH 

    சூரங்குடி அருகே 460 கிலோ கஞ்சா மற்றும் 240 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை கடத்திய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே கலைஞானபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடந்த 03.10.2022 அன்று கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சூரங்குடி காவல் நிலைய போலீசார் கலைஞானபுரம் காட்டுபகுதியில் சென்று பார்த்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 சரக்கு வாகனங்களில் 460 கிலோ கஞ்சாவும், 240 லிட்டர் மண்ணெண்ணெய்யும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து சூரங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மேற்படி கஞ்சா, மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டது யார் என்று விசாரணை மேற்கொண்டனர். 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர்  மணிமாறன் மற்றும் விளாத்திகுளம் உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், விருதுநகர் மாவட்டம் எம். ரெட்டியபட்டி பகுதியை சேர்ந்த ராஜாமாணிக்கம் மகன் கவிபாரதி (36), விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எம். சிலுக்கப்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் பாண்டியராஜன் (25) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் விக்னேஷ்வரன் (32) ஆகிய 3 பேரும் சட்டவிரோதமாக சரக்கு வாகனங்களில் கஞ்சா மற்றும் மண்ணெண்ணெய்  கடத்தியது தெரியவந்தது.

உடனே மேற்படி தனிப்படை போலீசார் கவிபாரதி, பாண்டியராஜன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கார், மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கஞ்சா மற்றும் மண்ணெண்ணெய் கடத்திய வழக்கில் 3பேரை கைது செய்த விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம்.

Comments