பாம்பன் பாலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அந்தரத்தில் தொங்கிய ஆம்னி பேருந்து! உயிர் தப்பிய பயணிகள்!

 

-MMH

பாம்பன் சாலை பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். முன்பகுதி அப்பளம் போல நொறுங்கிய நிலையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பேருந்தை உள்ளூர் மக்களே கயிற்றில் கட்டி இழுத்து மீட்டனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பாலம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ராமேஸ்வரம் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்தப் பாலத்தில் நின்று கடலின் அழகை ரசித்துச் செல்வார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது விபத்து நடப்பது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருந்த தனியா் சுற்றுலா பேருந்து ஒன்று, முன்னே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்துடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் தனியார் பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்புச் சுவர் மற்றும் விளக்கு கம்பத்தில் மோதி நின்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அப்பகுதியில் குவிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் பேருந்திலிருந்து இறக்கப்பட்ட நிலையில், பக்கவாட்டு கட்டையில் மோதி கவிழும் நிலையில் இருந்த பேருந்தை கயிறை கட்டி பாலத்தின் நடுப்பகுதிக்கு பொதுமக்கள் இழுத்தனர். இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

சுற்றுலாப் பயணிகள், படப்பிடிப்புகள் என எப்போதும், பரபரப்பாக காணப்படும் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் பாலத்தில் சுற்றுலா வாகனங்கள் விதிகளை மீறி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு கவனம் சிதறுவதாகவும், பதற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற விபத்துக்களை தவிர்க்க சுற்றுலா வாகனங்கள் பாலத்தில் நிறுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments