தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டம்!! கேள்விக்குறியாகும் சுகாதாரம்!!!

  -MMH 

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காலவரையற்ற போராட்டத்தை துவங்கினர்.தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நிர்ணயித்த, 721 ரூபாய் தினக்கூலியை வழங்க வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; உள்ளாட்சிகளில் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட, 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டம் நடக்கிறது. 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை உள்ளடக்கிய, கோவை மாவட்ட துாய்மை தொழிலாளர் சங்கங்களின் போராட்ட கூட்டமைப்பினர், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தி சிலையில் வைத்து, போராட்டத்தை துவக்கினர்.         

கோவை மாவட்ட துாய்மை தொழிலாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:         

கடந்த நான்காண்டுகளாக, 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். கலெக்டர் நான்கு மாதங்களுக்கு முன், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு பின்னரும், மாநகராட்சி அதிகாரிகள் கூலி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இதனால், நகராட்சி கமிஷனர், பேரூராட்சி, ஊராட்சி செயல் அலுவலர்கள் வழங்கிய கூலியை திரும்ப பெற்று விட்டனர். பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளோம். 

கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். விடியல் அரசு வேண்டும் என்று தான் ஓட்டளித்தோம். ஆனால், ஓட்டளித்த தூய்மை பணியாளர்களை கவுன்சிலர்கள், கவுன்சிலர்களின் கணவர்கள் மிரட்டுவது வேதனைக்குரியது. எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம். நாளை(இன்று) முதல் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். போராட்டத்தால் நேற்று பல்வேறு பகுதிகளிலும், குப்பை அகற்றப்படவில்லை. 

அடுத்தடுத்து வரும் பண்டிகைகளின்போது, அதிக குப்பை சேர வாய்ப்புள்ளது. அவற்றை அகற்றாவிடில், மாநகரத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு துாய்மை பணியாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை.

Comments