ரூ.1.50 கோடி மதிப்பு உள்ள நகைகளை கொள்ளையடித்த வட மாநில 3 சிறுவர்கள் கைது!!

 

-MMH

தாம்பரம் சேலையூர் அருகே உள்ள கவுரிவாக்கத்தில் வேளச்சேரி பிரதான சாலையில் 'புளு ஸ்டோன்' என்ற பெயரில் நகைக் கடை உள்ளது. அப்பகுதியில் பிரபலமான இந்த நகைக்கடையில் வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க நகைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த நகைக்கடையில் பணிகளை முடித்துவிட்டு கடை ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை பொறுப்பாளரான ஜெகதீசன் என்பவரின் செல்போனில் அலாரம் ஒலித்தது. நகைக் கடைக்குள் யாரோ புகுந்துவிட்டதை உணர்த்தும் வகையில் அலாரம் அடித்ததால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன் இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல்தெரிவித்தார்.https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

உடனடியாக சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது புளுஸ்டோன் நகை கடையில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. நகைக் கடையில் உள்ள பைப் லைன் வழியாக ஏறி மர்ம நபர்கள் நகைக்கடை மாடிக்கு சென்றதும், பின்னர் அங்கிருந்து லிப்ட் இணைப்பு அறை வழியாக நகைக் கடைக்குள் சென்று கைவரிசை காட்டியதும் கண்டு பிடிக்கப்பட்டது. நகை கடையில் புகுந்த கொள்ளையர்கள் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க- வைர நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொள்ளையர்கள் 3 பேர் கூட்டாக சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் 3 பேரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கொள்ளையர்கள் அணிந்துருந்த டி சர்ட்டை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. 

இதில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கினான். அருகில் உள்ள டீக்கடை ஒன்றில் வைத்து போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் நகைக்கடைக்கு எதிரில் தங்கி இருப்பதாகவும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்ததாகவும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். நகைக்கடையில் கொள்ளை அடித்தபின் கொள்ளையர்கள் அருகில் உள்ள நகைக்கடை மாடியில் குதித்து தப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். 

இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அசாமை சேர்ந்த 2 சிறார்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ருக்மாங்கதன் வ.  வடசென்னை.

Comments