மழைநீரில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..

 

-MMH

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் லட்சுமி(40). குடிசை வீட்டில் தனது மகள்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை முழுவதும் பலத்த மழை பெய்துவந்தது. பல்வேறு இடங்களில்குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கனமழை மற்றும் புயலால் தனது வீட்டிலேயே இருந்தால் ஆபத்து என கருதியலட்சுமி, தனது மகள்களுடன் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் சென்று தங்க முடிவு செய்தார்.

லட்சுமி தனது அண்ணன் மகன் ராஜேந்திரன்(25) என்பவருடன் அப்பகுதியில் தேங்கி இருந்த மழைநீரில் நடந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த லட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. கீழே விழுந்த அவரை கண்ட ராஜேந்திரன் காப்பாற்ற முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மடிப்பாக்கம் போலீஸார், மின் இணைப்பை துண்டித்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, இருவரின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இது குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,                                                            -ருக்மாங்கதன் வ.  வட சென்னை.

Comments