அம்பேத்கர் யார்? உண்மையான வரலாறு என்ன விரிவான தகவல்கள் !!!

 

   -MMH 

   இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும்,  இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.

அண்ணல் அம்பேத்கர் யார் என்று கேட்டால், ‘சட்டமேதை’ என்று பாடப்புத்தகத்தில் படித்ததை அனைவரும் ஒப்பித்துவிடுவார்கள். ஆனால், அவரை சாதித்தலைவராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் தலைவராகப் பார்க்கும் பார்வையே பலரிடமும் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் சாதிய வன்மத்துடன் அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன அல்லது அவமானப்படுத்தப்படுகின்றன. அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்தவரின் சிலைகளை அடைக்க கூண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. நீங்கள், உங்கள் வீட்டில் அம்பேத்கர் படத்தை மாட்டிவையுங்கள் அல்லது உங்கள் வாகனத்தில் அம்பேத்கர் உருவத்தை வரைந்துவையுங்கள். நீங்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களைப் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் பலரும் நினைப்பார்கள். 

ஒருவரின் பெயர் படேல், நேரு, காந்தி, ஜவஹர், சுபாஷ் என்றெல்லாம் இருக்கும்போது, அவரின் சாதி என்ன என்று கேள்வி எழுப்பப்படுவதில்லை. ஆனால், ஒருவருக்கு அம்பேத்கர் என்று பெயர் இருந்தால், கண்டிப்பாக அவர் என்ன சாதி என்ற கேள்வி முகத்தில் வீசப்படும்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இட ஒதுக்கீடு ஆபத்து.?

தமிழகம் என்பது சமூக நீதியின் நிலம். 1921, நீதிக்கட்சி ஆட்சியிலேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. ஆனால், சுதந்திர இந்தியாவில் அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது.

1950-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது. ‘அரசியல் சட்டத்துக்கு எதிரானது’ என்று தீர்ப்பளிக்கப்பட்டு, இட ஒதுக்கீடும் ரத்துசெய்யப்பட்டது. இதற்கு எதிராக, தந்தை பெரியார் தலைமையில் மாபெரும் போராட்டம் வெடித்தது. அதன் விளைவாக, இந்தியாவின் முதல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கே ‘பட்டியலினத்தவர்’ என்ற சட்ட அங்கீகாரம் இருந்தது. பாபாசாகேப் அம்பேத்கர்தான், ‘இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்’ என்ற வகைப்பாட்டையும் உருவாக்கினார்.

அமைச்சர் பதவி ராஜினாமா;.

அதுமட்டுமல்ல, 1951-ல் அவர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விடுத்த அறிக்கையில், ‘ ‘இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்’ என்ற பிரிவை அரசியல் சட்டம் ஏற்று ஓராண்டு ஆகிவிட்டதே, இன்னும் ஏன் அவர்கள் நலன்களை ஆராயும் ஆணையம் உருவாக்கப்படவில்லை?’ என்று நேரு அரசாங்கத்தைக் கண்டித்தார். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் வெறுமனே தாழ்த்தப்பட்ட தலைவரா? இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், ஏன் தன் பதவியைத் தூக்கியெறிந்தார்? ‘

பாரம்பரியம்’ என்ற பெயரில் இந்துக்களால் ஆங்காங்கே கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறைகளுக்கு மாறாக, அவர்களுக்கென்று ஒரு பொதுவான சட்டத்தை உருவாக்குவதற்காகவே, ‘இந்து சட்டத்தொகுப்பு மசோதா’வைக் கொண்டுவந்தார். இப்போது, யாரெல்லாம் ‘இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் வேண்டும்’ என்று குரல் கொடுக்கிறார்களோ அவர்கள்தான் ‘இந்துக்களுக்கே பொதுச்சட்டம் கூடாது’ என்று அம்பேத்கருக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள்.

பெண்களுக்கு சொத்து உரிமைகள்;

அம்பேத்கர் கொண்டுவந்த ‘இந்து சட்டத்தொகுப்பு மசோதா’வில், ‘பெண்களுக்கு சொத்துரிமை அளிக்க வேண்டும்’, ‘பெண்களுக்கு மணவிலக்கு செய்யும் உரிமை வேண்டும்’ என்ற அம்சங்களை அவர்கள் ஏற்கவில்லை. இந்து சட்டத்தொகுப்பு மசோதாவை சாதியச் சனாதனிகள் ஏற்காததால், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெண்களின் உரிமைகளுக்காகத் தன் பதவியைத் தூக்கியெறிந்தவர், அம்பேத்கர். இப்போது சொல்லுங்கள், அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும்தான் தலைவரா? 

காவிச் சாயம் ;

அம்பேத்கரை ‘சாதித்தலைவர்’ என்று முத்திரை குத்தும் கயமை என்றால், இன்னொருபுறம் அவருக்கு காவிச்சாயம் பூசி, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ ஆக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. காஷ்மீர் பிரச்னை, பொது சிவில் சட்டம், பாகிஸ்தான் பிரிவினை போன்றவற்றில் அம்பேத்கர் பேசியவற்றில், எழுதியவற்றில் சில வரிகளைப் பிய்த்துப்போட்டு அவரை மதவாதியாக நிறுவப்பார்க்கிறார்கள். இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில், அம்பேத்கருக்காக வாக்களித்தது முஸ்லிம் லீக் என்னும் உண்மையை மறைத்துவிட்டுதான் அவரை இந்துத்துவ அம்பேத்கராக நிறுவப்பார்க்கிறார்கள். அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவிலேயே மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அவர் பெயரை வைக்கக்கூடாது என்று போராட்டம் நடத்தியவர்கள்தான், இன்று அவருக்கு காவிச்சாயம் பூசப்பார்க்கிறார்கள்.

மதச்சார்பற்ற’ நாடாக இந்தியா;

மதச்சார்பற்ற’ நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் விருப்பம். ஆனால், மதவாதத்தின் அடிப்படையிலான கும்பல் கொலைகள், அம்பேத்கர் விரும்பிய மதச்சார்பின்மைக்கு எதிரானது. ரிசர்வ் வங்கியை உருவாக்கியவர் அம்பேத்கர். ஆனால் ரிசர்வ் வங்கி, நீதித்துறை, சிபிஐ போன்ற சுயேச்சையான அமைப்புகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

உண்மையை உரக்கச் சொல்வோம்;

உரக்கச் சொல்வோம். அம்பேத்கர் சாதித்தலைவரும் அல்ல; மதவாதத் தலைவரும் அல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இழைக்கப்படுகிறதோ அதற்கு எதிரான குரல்களுக்குப் பெயர், அம்பேத்கர். எங்கெல்லாம் அநீதி திணிக்கப்படுகிறதோ, அதற்கு எதிரான நீதியின் வேட்கைக்குப் பெயர், அம்பேத்கர். எங்கெல்லாம் பாரபட்சம் நிலவுகிறதோ அதை எதிர்த்து சமத்துவத்துக்காகப் போராடுபவர்களின் தோள்களில் விழும் கைகளின் பெயர், அம்பேத்கர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments