ஒரே பெண்ணுக்காக மோதல்.. பாலிடெக்னிக் மாணவரை கொன்று புதைத்த 3 சிறுவர்கள்.. நெல்லை அருகே பகீர் சம்பவம்..

 

-MMH

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் காதல் தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை 3 சிறுவர்கள் சேர்ந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பே நடைபெற்ற இந்தக் கொலை தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 16-வயது சிறுவனை வேறு ஒரு வழக்கிற்கு விசாரணைக்கு அழைத்த பிறகு கொலை குறித்த தகவல் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவரும், சிறுவன் ஒருவனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நான் லவ் பண்ணுற பெண்ணையே நீயும் லவ் பண்ணுவியா என ஆத்திரமடைந்த சிறுவன் நுங்கு சாப்பிடலாம் என்று அழைத்து சென்று பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை தசரா திருவிழா பார்க்க கூட்டிச் சென்றார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள செல்வமருதூர் என்ற ஊரை சேர்ந்த தங்கதுரையின் மகன் ராஜேந்திரன். 20 வயதான ராஜேந்திரன் அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி உடன்குடி அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை பார்க்க ராஜேந்திரன் சென்றுள்ளார்.


தசரா பண்டிகையை பார்க்க சென்ற ராஜேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன ராஜேந்திரன் பெற்றோர்கள் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர். நண்பர்களிடமும் விசாரித்துள்ளனர். ஆனால் ராஜேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கல்லூரி மாணவர் ராஜேந்திரன் மாயமானது குறித்து திசையன்விளை போலீசாரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை தேடி வந்தனர். ஆனால், ராஜேந்திரன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் பைக் ஒன்றிற்கு தீ வைத்த வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசராணைக்கு பிறகு சிறுவனை போலீசார் விடுவித்தனர்.

போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த சிறுவன் தனக்கு தெரிந்த ஒருவரிடம் ராஜேந்திரன் கொலை தொடர்பாகத்தான் விசாரிக்க அழைத்து இருப்பார்கள் என்று நினைத்து பயந்துவிட்டேன். ஆனால் அதற்காக விசாரணைக்கு கூப்பிடவில்லை என்று சொல்லி இருக்கிறான். இந்த தகவல் போலீசாரின் காதிற்கு சென்றது. உடனே போலீசார் சிறுவனை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிட வைக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பாலிடெக்னிக் கல்லூரி மாணவரான ராஜேந்திரனும் 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ராஜேந்திரனை கொலை செய்ய வேண்டும் என விபரீத திட்டம் போட்ட சிறுவன்... இதற்காக தனது 14 வயது நண்பர்கள் இருவரை தனது திட்டத்துக்கு உதவுமாறு கூட்டு சேர்த்திருக்கிறார்ன். அவர்களும் ஒத்துழைக்கவே 3 பேரும் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி, தசரா திருவிழாவிற்கு வந்திருந்த ராஜேந்திரனை தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்து பகுதியில் இருக்கும் தேரிக்காட்டிற்கு பனை நுங்கு சாப்பிடலாம் எனக் கூறி அழைத்து சென்றுள்ளான். சிறுவர்களின் திட்டத்தை அறியாத ராஜேந்திரனும் அவர்கள் பேச்சை கேட்டு தேரிக்காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜேந்திரனை மூன்று சிறுவர்களும் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் ராஜேந்திரனின் உடலை அங்குள்ள ஒரு குழியில் போட்டு புதைத்துள்ளனர்.

இதையடுத்து எதுவும் நடக்காததுபோல் அந்த சிறுவர்கள் 3 பேரும் இருந்துள்ளனர். இந்த நிலையில் தான் வேறு ஒரு வழக்கிற்காக ஒரு சிறுவனிடம் விசாரணை நடத்தியபோது அந்த சிறுவனே வாய் கொடுத்து இந்த உண்மையை உளறியுள்ளான். இதையடுத்து 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறுவர்கள் 3 பேரையும் போலீசர் ராஜேந்திரனை கொலை செய்த இடத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு ராஜேந்திரன் உடல் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தை சிறுவர்கள் போலீசாரிடம் காண்பித்தனர். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ராஜேந்திரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் தகராறில் பாலிடெக்னிக் மாணவரை 16 வயது சிறுவன் உள்பட 3 சிறுவர்கள் இணைந்து கொலை செய்து இருக்கும் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி,

-வேல்முருகன்.

Comments