துப்பாக்கியை வீட்டுக்கு எடுத்துச் சென்ற துப்புரவு பணியாளரால் பரபரப்பு!! காவல்துறையினர் தீவிர விசாரணை!!!

-MMH

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் 45 வயதான சுப்பிரமணியன். இவர் பள்ளபாளையம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந் தேதி புத்தாண்டு தினத்தன்று, சுப்பிரமணியன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் பெண் ஒருவர் அந்த பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

பள்ளபாளையம் சாவித்ரி மில் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் இருந்த குப்பைகள் அனைத்தையும் எடுத்து சுத்தம் செய்யும் பணியில் சுப்பிரமணியன் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பை தொட்டியின் அருகே ஒரு கறுப்பு நிற பெட்டி இருந்தது. 

இதனை கண்ட சுப்பிரமணி அருகே சென்று அந்த பெட்டியை கையில் எடுத்து அதனை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் துப்பாக்கி ஒன்று இருந்தது. இதையடுத்து அவர் யாருக்கும் தெரியப்படுத்தாமல் அந்த பெட்டியையும், துப்பாக்கியையும் எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் துப்பாக்கி வைத்திருந்தால் மாட்டிகொள்வோம் என அவருக்கு பயம் ஏற்பட்டுள்ளது.

 இதையடுத்து அவர் போலீஸ் அவசர எண்ணாண 100 தொடர்பு கொண்டு தான் கீழே கிடந்து ஒரு துப்பாக்கி எடுத்ததாகவும், அதனை தனது வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சூலூர் போலீசார் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டனர். மேலும் சுப்பிரமணியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கி எப்படி கிடைத்தது, எங்கு கிடந்தது என பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டு விசாரித்தனர். அவர் கீழே கிடந்து எடுத்ததாக பதில் கூறி வருகிறார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த துப்பாக்கியையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மேட் இன் ஜெர்மனி என எழுதப்பட்டிருந்தது. இந்த துப்பாக்கி ஒரிஜினலா அல்லது போலியா என்பது தெரியவில்லை. 

மேலும் சூலூர் பகுதி வழியாக காரில் ஹவாலா பணம், கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது. இதனால் அந்த கும்பல் யாராவது துப்பாக்கியை இங்கு வீசி சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. குப்பை தொட்டி அருகே துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments