தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள்...!

 
   -MMH

தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம் வழியாக மதுரைக்கு ரயில் - ரயிலுக்காக காத்திருக்கும் மக்கள்...!

   தூத்துக்குடி மாவட்டம் தென்னகத்தின் தொழில் நகரமாக விளங்கி வருகிறது. இங்கு துறைமுகம், விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை, ரயில் போக்குவரத்து என்று 4 விதமான போக்குவரத்துக்கும் வாய்ப்பான மாவட்டமாக தூத்துக்குடி விளங்கி கொண்டு இருக்கிறது. இங்கு கட்டமைப்பு வசதிகளை மேலும் அதிகரிக்கும் வகையில் விமானநிலையம் விரிவாக்கம், துறைமுகம் விரிவாக்கம், தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தல், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்துக்கும், வெளி மாவட்டத்தில் உள்ள நிறுவனங்கள் துறைமுகத்துக்கு சரக்குகளை கொண்டு வரவும் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு பயணிகள் ரயிலும், மைசூருக்கு ஒரு பயணிகள் ரயிலும், கோவை, நெல்லைக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வாராந்திர ரயிலாக ஒகாவுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து கோவை லிங்க் எக்ஸ்பிரஸ், குருவாயூர் லிங்க் எக்ஸ்பிரஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரை லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதிகளாக விளங்கி வரும் குளத்தூர், விளாத்திகுளம் பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க ஏதுவாக ரயில் போக்குவரத்தை தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து கடந்த 1999-2000-ம் ஆண்டில் ரயில்வே பட்ஜெட்டில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய வழித்தடத்தில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு கடந்த ஜூன் 2008 மாதம் ரயில்வே போர்டுக்கு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் ரயில்கள் மணியாச்சி, கோவில்பட்டி வழியாக 156 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்கின்றன. புதிதாக அமைக்கப்படும் ரயில் பாதை தூத்துக்குடி மாவட்டத்தின் வறண்ட பகுதியை வளப்படுத்தும் வகையில் அமைய உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


இந்த ரயில் பாதை தூத்துக்குடி, மீளவிட்டான், மேலமருதூர், குளத்தூர், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், பந்தல்குடி, அருப்புகோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி, ஆவியூர், பாறைப்பட்டி, திருப்பரங்குன்றம் வழியாக மதுரைக்கு செல்கிறது. இந்த ரயில் பாதையின் மொத்த தூரம் 143½ கிலோ மீட்டர் ஆகும். இதன் மூலம் சுமார் ஒரு மணி 10 நிமிடங்கள் வரை மதுரைக்கான பயண நேரம் குறையும் வாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் அனைத்தையும் இணைத்து செல்லும் இந்த ரயில்வே பாதை பொதுமக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. விளாத்திகுளம், புதூர், குளத்தூர், நாகலாபுரம் பகுதிகளில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால் இந்த பகுதிகள் வளம் பெறும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து மேலமருதூர் வரை 23 கிலோ மீட்டர் தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் முடிக்கப்பட்டு அதிவேக ரயில் ஓட்ட சோதனையும் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த ரயில் பாதையில் தற்போது எந்தவித ரயில்களும் இயக்கப்படவில்லை. ஆனாலும் வாரம் தோறும் ஒரு ரயில் மேலமருதூர் வரை இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் கண்ணுக்கெட்டும் தூரம் வரை வந்த ரயில் பாதை நம் ஊருக்கு வராமல் அங்கிட்டே நிக்கே என வழி மேல் விழி வைத்து காத்து இருக்கின்றனர் குளத்தூர், விளாத்திகுளம் மக்கள். இந்த ரயில் பாதையை விரைந்து தங்கள் பகுதிக்கும் கொண்டு வந்து ரயில்கள் இயக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பது மக்களிடையே சிறிது ஆறுதலை தந்து உள்ளது. அதே நேரத்தில் இந்த வழித்தடத்தில் அமைய உள்ள பாலங்களுக்கு ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு உள்ளது. இதனால் புதிய ரயில் பாதை பணிகள் வேகமெடுக்குமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

தூத்துக்குடியில் இருந்து 

-வேல்முருகன்.

Comments