மனு கொடுக்க வந்தவரை நிற்கவைத்துவிட்டு பிரியாணி ஆர்டர் செய்ததாக புகார்!! அதிகாரி விளக்கம்.!!

-MMH

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகர வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் தனலட்சுமி. இவரிடம் தன்னுடைய குழந்தைகளின் இருப்பிடச் சான்றிதழ் தொடர்பாக மனு அளிக்க ஒருவர் சென்றிருக்கிறார்.

அப்போது, வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி தன் இருக்கையில் அமர்ந்தவாறு, மனு அளிக்க வந்தவரைக் கண்டுகொள்ளாமல், ஆய்வுக்காக வரும் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மதிய உணவுக்கான பட்டியலைத் தன் அலுவலக ஊழியரிடம் விவரித்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது. அதில், தாராபுரத்திலுள்ள பிரபல அவைச உணவகத்தில் தனக்கும், உயரதிகாரிகள், அவர்களின் வாகன ஓட்டுநர்களுக்கும் மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, சில்லி சிக்கன், கோலா உருண்டை எனப் பல ஐட்டங்களை அடுக்கியிருக்கிறார் தனலட்சுமி. 


அதுமட்டுமல்லாமல், அதிகாரிகளுக்கு ஆய்வு மாளிகை புக் செய்ய வேண்டும் எனத் தன சக ஊழியரிடம் தெரிவிக்கிறார். அதுவரை மனு அளிக்க வந்தவர் வருவாய் ஆய்வாளர் முன்பு மனுவை கையில் வைத்துக் கொண்டே நிற்கிறார்.

வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி இந்த வீடியோ குறித்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியிடம் கேட்டபோது, " குழந்தைகளுக்கு இருப்பிடச் சான்றிதழ் கேட்டு வந்திருந்தவரின் விண்ணப்பத்தை ஆய்வுசெய்து, அதை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டேன். அவர் போகாமல் நின்றுகொண்டிருந்தார்.

சம்பவத்தன்று காலையிலிருந்தே நான் சாப்பிடவில்லை. மதியம் என் சகோதரர் என்னைப் பார்க்க வருவதால், அவருக்கும் சேர்த்து உணவு ஆர்டர் செய்தேன். மற்றபடி, உயரதிகாரிகளுக்கெல்லாம் நான் உணவு ஆர்டர் செய்யவில்லை. அரசு அதிகாரியாக இருந்தால், உணவைக்கூட ஆர்டர் செய்யக் கூடாதா... சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு இப்படி வீடியோவாகப் பதிவுசெய்து பரப்பிவருகின்றனர்" என்றார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா.

Comments