கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே 40 பேருடன் சுற்றுலா படகு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து!!!

-MMH

கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த தானூர் அருகே ஓட்டும்புரத்தில் நேற்று இரவு தூவல் தீர்த்தம் ஆற்றில் 40 பேருடன் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த படகு கடலும் ஆறும் சங்கமிக்கும் இடமான பரப்பனங்காடி கடற்கரை பகுதி அருகே சென்ற போது அந்த படகு திடீரென தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இதுவரை 22 பேர் பலியாகிவிட்டனர். அவர்களில் 7 பேர் குழந்தைகள் ஆவர். படகு கவிழ்ந்ததும் அங்கிருந்த மீனவர்கள் சிலர் நீச்சல் அடித்து சிலரை காப்பாற்றியுள்ளனர். கேரளாவில் கோடை விடுமுறைக்காக சுற்றுலா பயணிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர்கள் கோட்டக்கல்லில் உள்ள மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியுடன் அனுமதிக்கப் பட்டுள்ளனர். படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியவர்களை கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு நடவடிக்கைகளை செய்து வருகிறார்கள்.

மீட்பு பணிகள் இன்னமும் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த தொடர்பாக தானூரை சேர்ந்த படகு உரிமையாளர் நாசர் என்பவர் மீது போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். படகு பயணம் விதிமுறைகளை மீறி உள்ளதாக போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

படகு உரிமையாளர் மீன்பிடி படகை சுற்றுலா சேவைக்காக மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுற்றுலா படகுகளுக்கு வழங்கப்படும் தகுதி சான்றிதழ் இல்லாமல் படகு இயக்கப்பட்டதையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் நடந்த படகு விபத்து வரலாற்றில் தானூர் அருகே 22 பேரின் உயிரை குடித்த விபத்துதான் மிகவும் மோசமானது என்கிறார்கள்.

இந்த விபத்து ஏற்பட்டதற்கு காரணம் படகு முறையாக கட்டமைக்கப்படவில்லை, அதிக பாரம் ஏற்றிச் சென்றது, லைப் ஜாக்கெட் கொடுக்ககாதது என கண்டறியப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன்.

Comments