கொட்டாம்பட்டி மற்றும் கீழவளவு பகுதிகளில் நடந்த இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி!!!

மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் உடையப்பராஜா (வயது 35). கொட்டாம்பட்டி பகுதியில் காவிரி குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான ஒப்பந்ததாரராக இருந்து வந்தார்.

இந்நிலையில், உடையப்பராஜா நேற்றிரவு தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை-திருச்சி நான்கு வழி சாலையில் வலைச்சேரிபட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடையப்பராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் கொட்டாம்பட்டி காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மேலூர் தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலூர் அருகே கீழையூரை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் அழகுசுந்தரம் (22). இவர் தனது இரு சக்கர வாகனத்தில் கீழவளவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ரெங்கசாமிபுரம் அருகே வந்தபோது மேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரை ஓட்டி வந்த திருப்பத்துரை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து அழகுசுந்தரம்  ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதால், அழகுசுந்தரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

- மேலூர், தமிழரசன்.

Comments