பிரதமர் மோடி திறந்து வைத்த மதுரை - நத்தம் நான்கு வழிச்சாலைக்கு தலை சுற்ற வைக்கும் சுங்கக்கட்டணம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த மதுரை-நத்தம் புதிய நான்கு வழிச் சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைக்கப்பட்ட புதிய சுங்கச்சாவடியில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு இன்று செயல்படாட்டிற்கு வருவதாக இருந்த நிலையில் திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டது.

மதுரை-நத்தம் நான்கு வழிச் சாலையையும், அதில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் பாலத்தையும் சமீபத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த சாலையில் அமைக்கப்பட்ட பறக்கும் பாலம், "தமிழகத்திலே மிக நீளமான பாலம்" என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை, நத்தம் வழியாக துவரங்குறிச்சிவரை 63 கி.மீ. செல்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனிடையே மதுரை - ஊமச்சிக்குளம் - சத்திரப்பட்டி இடையே உள்ள சாலை பழைய நிலையிலேயே உள்ளது. அப்பகுதியில் மட்டும் முழுமையாக புதிய சாலை போடவில்லை. எனவே, அந்தப் பகுதியில் புதிய சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மதுரையிலிருந்து செல்லும் வாகன ஓட்டிகள் திருச்சிக்கும், சென்னைக்கும் இந்த சாலை வழியாக விரைந்து செல்ல முடிவதால் பயண நேரம் குறையும். இந்த சாலையில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் பரளி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை புதிதாக சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கான கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் சுங்கச்சாவடியில் ஒரு முறை செல்லும் கார்களுக்கு ₹.180 என்றும் 24 மணி நேரத்திற்குள் டோல்கேட் வழியாக திரும்பி வந்தால் ₹.270 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இலகுரக  வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பஸ்களுக்கு ₹.290, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ₹.435 என்றும், பஸ் அல்லது டிரக்குகளுக்கு ₹.605, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ₹.905 என்றும், 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ₹.660, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ₹.990, பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாகனம் அல்லது பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு ₹.950 , 24 மணி நேரத்திற்குள் திரும்பி வந்தால் ₹.1,425 என்றும் சுங்கக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதிக அளவு கொண்ட வாகனம் (7 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகள் கொண்டவை) ஒரு முறை செல்வதற்கு ₹.1,155, 24 மணி நேரத்திற்குள் திரும்பி வருவதற்கு ₹.1,730 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக உபயோகம் அல்லது உள்ளூர் வாகனங்களுக்கு (20 கி.மீ. தொலைவிற்குள்) மாதாந்திர பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இந்த கட்டணம் இன்று 27ம் தேதி காலை 8 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

இதனிடையே, நேற்று திட்டமிட்டப்படி இந்த சுங்கச்சாவடி திறக்கப்படவில்லை. இந்த கட்டண முறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் செயல்பாட்டிற்கு வரவில்லையா? அல்லது தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை. வழக்கமாக தற்போதுள்ள நான்கு வழிச்சாலைகளில் இதுபோன்ற அதிக சுங்கச்சாவடி கட்டணம் வசூல் செய்யப்படுவதில்லை. வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக சுங்கச்சாவடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். 

அதனால், பிரமாண்ட பறக்கும் சாலை, நான்கு வழிச்சாலை அமைத்தும் கூடுதல் சுங்கச்சாவடி கட்டணத்தால் இந்த சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் மாற்று சாலை வழியாகச் செல்ல வாய்ப்புள்ளது. அதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை நத்தம் பறக்கும் பாலமும், நான்குவழிச்சாலையும் அமைத்தும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனில்லாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அந்தச் சாலையை கடந்து சென்று வருகின்றனர்.

- தமிழரசன், மேலூர்.

Comments