கோவை கொடிசியாவில் கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு நடைபெற்றது!!

-MMH

பல்வேறு நாடுகள் அங்கமாக உள்ள ஜி 20 உச்சி மாநாடு    இந்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெற உள்ள நிலையில், ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில் கோவையில் நூற்று ஐம்பதிற்கும்  மேற்பட்ட சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அங்கமாக உள்ள கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக  ஜி 20  அறிவியல் உச்சி மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.கூட்டமைப்பின் தலைவர் நவமணி தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினராக சி.பி.எஸ்.இ.சென்னை மண்டல அதிகாரி தினேஷ்ராம்,ஸ்ரீ ஈஸ்வர் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் மோகன்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள  மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எதிர்கால நீர் மேலாண்மை,பூமி வெப்பமயமாதலை தடுத்தல், இயற்கை பேரழிவில் இருந்து மனித குலத்தை காப்பது போன்றவற்றில்  அறிவியலின் பயன்பாடு குறித்து  விவாதிக்கப்பட்டது. மாநாட்டின் ஒரு பகுதியாக  பள்ளி மாணவ,மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மாதிரிகள் அரங்கில் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.

இதில் நில நடுக்கம் போன்ற இயற்கை பேரழிவின் போது பாதுகாப்பான  கட்டிட நுணுக்கம்,ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பம்,நீர் மேலாண்மை,நவீன வகை சோலார் எனர்ஜி,என பல்வேறு வகையான புதிய கண்டுபிடிப்பு மாதிரிகளை காட்சிபடுத்தி இருந்தனர். இது போன்ற அறிவியல் தொடர்பான மாநாடுகள்,  மற்றும் கண்காட்சிகள்   அடுத்த தலைமுறை சார்ந்த பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டுவதாக மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அறிவியல் மாநாடு துவக்க விழாவில்,கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின்  நிர்வாகிகள் சுகுணா தேவி, நிர்மலா, கீதாராஜ், மார்ட்டின், சாம்சன், லிலி பிரின்சி, அபிஷேக் பால் ஜான்சன், ஞானபண்டிதன், கவிதா, வித்யாசங்கர், அரசு பெரியசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments