வ.உ.சி.யின் 152வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை!!!

-MMH

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள அவரது  நினைவு இல்லத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1872 செப்டம்பர் 5ம்தேதி ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி பிறந்தார். இவரது தந்தை பெயர் உலகநாதபிள்ளை, தாயார் பரமாயி அம்மையார். ஓட்டப்பிடாரத்தில் நடுத்தர கல்வியை முடித்த வ.உ.சி. தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார். பின்னர் பிப்ரவரி 1894ம் ஆண்டில் திருச்சியில் சட்டக்கல்வி பயின்றார். 1900ல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்கினார். 

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய வந்து இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது வ.உ.சி. அவர்களை கடுமையாகப் பாதித்தது. 

அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். வ.உ.சி. 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். டிசம்பர் 1906 ல் கப்பல்கள் வாங்குவதற்கு பம்பாய் சென்று திலகர் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்கள் இயக்கப்பட்டன. 

ஆங்கிலேயர்களால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை. இதுபோன்ற ஒரு தேசப்பற்று மிகுந்த ஒரு மாமனிதரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை மிகப் பெருமையாக உணர்கிறேன் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தெரிவித்தார். பின்னர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி செல்வி-க்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து கௌரவித்தார். அதனைத்தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார்.

இந்த பிறந்த நாள் விழாவில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள்  மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் அவர்கள் , துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் அவர்கள் , கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் அவர்கள் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன்பாண்டியன், ஓட்டப்பிடாரம்  சேர்மன்   ரமேஷ் அவர்கள்  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் அவர்கள்,  ஒட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள்,  கொடியன்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார் அவர்கள்  வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ் அவர்கள்,  மற்றும் பலர் கலந்து கொண்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

ஒட்டப்பிடாரம் நிருபர், 

-முனியசாமி.

Comments