ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!! - பி.லெனின் வேண்டு கோள்!!
ஆவணப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என தேசிய விருது பெற்ற பிரபல எடிட்டர் இயக்குனர் பி.லெனின் கோவையில் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில், 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதில் பிரபல எடிட்டரும்,இயக்குனருமான பி.லெனின் இயக்கிய ஆவணப் படமான சிற்பிகளின் சிற்பங்கள் சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கல்வி மற்றும் அதை கற்று கொடுக்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக உருவாக்கி உள்ள சிற்பிகளின் சிற்பங்கள் ஆவண படத்தை உருவாக்கிய லெனினுக்கு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாராட்டு விழா கோவை கிளஸ்டர் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்றது.இதில் எழுத்தாளர்கள்,ஓவியர்கள்,கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, இயக்குநர் பி.லெனின் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர், தமக்கு தெரிந்த ஒருவர், சிறுவயதில் படித்த காலத்தில் நன்றாக பாடம் நடத்தி சிறந்த ஆளாக்கிய ஆசிரியர் பற்றி ஒரு டாக்குமென்டரி எடுக்க கேட்டு கொண்டதிற்கிணங்க, எடுத்ததாக கூறிய அவர்,ஆனால்,ஓரு ஆசிரியருடன் நின்றுவிடாமல்,வாழ்வில், ஒவ்வொருவருக்கும் ஓரு ஆசிரியர் ஒவ்வொருவரின் வாழ்விலும் இருப்பார்கள்.
அவர்களையெல்லாம் நேரில் சந்தித்து ஒரு ஆவணமாக இந்த ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ஆவண படத்தை உருவாக்கியதாக தெரிவித்தார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் முன்னர், பாலர் அரங்கம் என அழைக்கப்பட்டதாக கூறிய அவர், அதில் முழுவதும் இலவசமாக குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக கூறினார்..
தற்போதும் அதேபோல் தமிழக அரசு குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட முன் வர வேண்டும்.என்றார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் அதிக குறும்படங்கள் ,தமிழகத்தில் தான் எடுக்கப்படுவதாகவும், ஆவணப்படங்கள்,குறும்படங்கள் ஆகியவற்றை எடுக்கும் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறிய ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் ,குழந்தைகளுக்கான தனிப்படங்களை குழந்தைகளே எழுதும் படங்களை தயாரிக்க மானியம் கொடுக்கவும் முன்வரவேண்டும்,என கேட்டு கொண்டார்.
-சீனி, போத்தனூர்.
Comments