முக்கொம்பு சுற்றுலா தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்! சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் நால்வர் கைது!!!

 
  -MMH

முக்கொம்பு சுற்றுலா தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்! சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் நால்வர் கைது!

  திருச்சி - கரூர் சாலையில் இருக்கிறது முக்கொம்பு. சுற்றுலாத்தலமான இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துபோவது வழக்கம். அதேபோல், இங்கு ஏராளமான காதல் ஜோடிகளும் வருவது வழக்கம். அதேபோல திருச்சி துவாக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது ஆண் நண்பருடன் முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு நேற்று முன்தினம் வந்திருந்தார். அந்தச் சிறுமியும், அவரின் காதலரும்

காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு காவல்துறையினர் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக  ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் அங்கு விரைந்து சென்ற ஜீயபுரம் காவல்துறையினர், அங்கு விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி ரோந்து எண் 6ல் பணிபுரியும் முதல்நிலைக் காவலரான சங்கர் ராஜாபாண்டியன், ஜீயபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சித்தார்த்தன் ஆகியோர்மீது ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்தனர். அதோடு, அவர்கள் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சம்பவம் குறித்து கூறப்படுவதாவது;

'மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமைக்கும் தனிப்படைகளில் அவ்வப்போது இடம்பெறும் இந்த காவலர்கள் நால்வரும், நண்பர்களாகியிருக்கின்றனர்.

இந்நிலையில் எவ்வித அனுமதியோ, விடுப்போ எடுக்காமலும், உயரதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் சொல்லாமலும் சிகப்பு கலர் காரில் சாதராண உடையில் முக்கொம்புக்கு அவர்கள் நால்வரும் சென்றிருக்கின்றனர். அங்கு சசிகுமார் உள்ளிட்ட நால்வரும் மது அருந்திவிட்டு, காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, மதுபோதையில் முக்கொம்பு பகுதியிலுள்ள ஒதுக்குப்புறமான இடத்திலிருந்த இரண்டு காதல் ஜோடிகளிடம் வம்பிழுத்திருக்கின்றனர். அதில், ஒரு காதல் ஜோடி இவர்களிடமிருந்து தப்பித்து ஒடிவிட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில், தனிமையில் இருந்த மற்றொரு ஜோடியான 17 வயது சிறுமி, அவரின் காதலரான 19 வயது இளைஞர் ஆகியோரை பிடித்து மிரட்டி, 'கஞ்சா விற்பனை செய்கிறீர்களா... உன்னை விசாரணை செய்ய வேண்டும்' என்று கூறி, அந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று தாக்கி விரட்டியிருக்கின்றனர்.

அதன் பிறகு, அந்தச் சிறுமியை மிரட்டி, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியிருக்கின்றனர். மதுபோதையில் அந்தச் சிறுமியிடம் அத்துமீறியவர்கள், அவரின் உடலைத் தொட்டு மிரட்டிப் பேசி, அவரின் செல் எண்ணைப் பெற்றிருக்கின்றனர்.

'எப்போது அழைத்தாலும் போன் பேச வேண்டும், கூப்பிடும் இடத்துக்கு வரவேண்டும்' என்று மிரட்டியிருக்கின்றனர். மேலும், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டு வீடியோ பதிவும் செய்திருக்கின்றனர்.

காருக்குள் மிரட்சியுடன் அமர்ந்திருந்த அந்த சிறுமியிடம் உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர் சங்கர் ராஜபாண்டியன் ஆகியோர் முத்தம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கின்றனர்.

அதோடு, அந்தச் சிறுமியின் உடலைத் தொட்டு முத்தமிடவும் முயற்சி செய்திருக்கின்றனர். அதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பின்பு, மாலை 6 மணிக்குமேல் அந்தச் சிறுமி சத்தம் போடவும், அவரை காரைவிட்டு கீழே இறக்கிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியான அந்தச் சிறுமி, அவரின் காதலன் ஆகியோர், முக்கொம்பு புறக்காவல் நிலையத்துக்கு ஒடிச் சென்று காவல்துறையைச் சேர்ந்த 4 பேரால் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். அதன்பேரில் காவல் நிலையத்திலிருந்து இரண்டு காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்றபோது, குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் காரில் மெயின் ரோடு நோக்கி வந்திருக்கின்றனர். அப்போது, அந்த இரண்டு காவலர்களும் அந்த காரை நிறுத்தி உள்ளே இருந்த உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம் விசாரித்தபோது, 'நான் கஞ்சா விற்பனை தொடர்பாக அவர்களிடம் விசாரணை செய்தேன். வேறு ஒன்றும் இல்லை' என்று கூறியிருக்கிறார்.

காவலர்கள் இருவரும் நேரடியாக உதவி ஆய்வாளர் சசிகுமாரிடம், இந்தப் பகுதிக்கான காவலர்கள் இங்கு பணியில் இருக்கின்றனர். இங்கு விசாரணை நடத்த நீங்கள் யார்... சிறுமியிடம் நீங்கள் எப்படி தவறாக நடந்து கொள்ளலாம்?' என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு உதவி ஆய்வாளர் சசிகுமார், அந்த காவலர்கள் இருவரையும் பார்த்து, 'உங்கள்மீது கஞ்சா வழக்கு போடப்போகிறேன். ஒழுங்காக ஒடிவிடுங்கள்' என்று அவர்களை மிரட்டியிருக்கிறார்.

இதனால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அப்போது, அங்குப் பணியிலிருந்த வேறு காவலர்கள் விவரம் கேட்டபோதும்கூட சசிகுமார் மற்றும் காரில் வந்தவர்கள் சரியாக பதிலளிக்காமல் சென்றிருக்கின்றனர். இந்த விவகாரம் திருச்சி மாவட்ட காவல் உயரதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது. அதனைத் தொடர்ந்து, முக்கொம்பில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், விசாரணை நடத்தியும், சிறுமியிடம் காவலர்கள் நால்வரும் அத்துமீறலில் ஈடுபட்டது உண்மை என்று கண்டறிந்தனர். அதையடுத்து, உதவி ஆய்வாளர் சசிக்குமாரை திருச்சி சரக ஐ.ஜி பகலவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதேபோல், காவலர்களான பிரசாத், சங்கர் ராஜபாண்டியன், சித்தார்த்தன் ஆகியோரை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அதோடு, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் நால்வர்மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவுசெய்ததோடு, அவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கின்றனர்.

கைதாகியுள்ள உதவி ஆய்வாளர் சசிக்குமார், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புதான் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்றிருக்கிறார். பயிற்சிக்குப் பிறகு கடந்த பத்து மாதங்களுக்கு முன்புதான் ஜீயபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிக்குச் சேர்ந்திருக்கிறார். தற்போது, அவர் தனிப்படையில் பணியைத் தொடர்ந்து வந்த நிலையில், இப்படி காவலர்களோடு சேர்ந்து சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் கைதாகியிருக்கிறார்.

வேலியே பயிரை மேய்ந்துள்ள இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

- பாரூக்.

Comments