அனைவருக்கும் கல்வி என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டி!!

அனைவருக்கும் கல்வி என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற  மாரத்தான் போட்டியில்  பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டியில்,  குழந்தைகளை வெற்றி பெற வைக்க பெற்றோர்களும் இணைந்து ஓடினர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி. கல்வி குழுமம் மற்றும் அல்கெமி பள்ளி சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது…அனைவருக்கும் கல்வி மற்றும் பள்ளிகளில்  பயிலும் குழந்தைகளை விளையாட்டில் ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இதில், 3 வயது குழந்தைகள் முதல் 17 வயது மாணவ,மாணவிகள்  வரை 4 பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.

முன்னதாக போட்டிகளை பி.பி.ஜி.கல்வி.குழுமங்களின் துணை தலைவர் அக்‌ஷய் மற்றும் அல்கெமி பள்ளியன் முதல்வர் முனைவர் விஜயலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். 3 முதல் 5 வயது குழந்தைகள் 500 மீட்டர் தொலைவும், இறுதியாக 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ,மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் என பிரிவிற்கு ஏற்றார் போல் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஐம்பதி வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள்  சரவணம்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து, விளாங்குறிச்சி வழியாக அல்கெமி    பள்ளியை சென்றடைந்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களையும் கோப்பைகளையும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வி அவர்கள் வழங்கினார். போட்டியில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்ற நிலையில் குழந்தைகளை வெற்றி பெற வைப்பதற்காக பெற்றோர்களும் இணைந்து ஓடியது குறிப்பிடதக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments