கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் வினாடி வினா போட்டி!!

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர் அணி வெற்றி பெற்றது.

ஜேடி எஜூகேசன் மற்றும் ஹிந்துஸ்தான் கல்லூரி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் கேமிங், வி.ஆர், கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் துறை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியை சேர்ந்த கார்த்திகேயன், ஆத்விக் ஆகிய மாணவர்கள் முதலிடம் பிடித்தனர். கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த ரோஹித், லட்சியபிரியன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் நடிகர் சதீஷ், நடிகை மிர்னாளினி ரவி, லைன்ஸ் கிளப் கோயம்புத்தூரின் கவர்னர் ஜெயசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசுகையில், "கல்லூரி படிக்கும் மாணவர்கள் 'கட்' அடிக்கலாம் 'பிட்' அடிக்கலாம். ஆனால் காதலில் விழுந்துவிட வேண்டாம். இது உங்களுக்கு படிக்கும் காலம். அதில் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை எனது வாழ்நாளில் மதுவோ, புகைபிடிப்பதையோ செய்ததில்லை. தொடர்ந்து உழைத்து சினிமா துறையில் முன்னேறினேன்.  நானே உங்கள் முன் ஒரு முன்னுதாரணமாக  நிற்கிறேன். போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளீர்கள்." என்றார்.

இந்த நிகழ்ச்சியில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, முதன்மைச் செயல் அலுவலர் சம்ஜித் தன்ராஜ், மேக்  மண்டல மேலாளர் பிரேம் ராஜா,  மண்டல தலைவர் சோம்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments