தேசிய கூடோ விளையாட்டில் தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்கள் வென்று கோவை வீரர், வீராங்கனைகள் சாதனை!! பயிற்சியாளர்களுக்கு ரூபாய் நோட்டு மாலை மற்றும் கிரீடம் அணிவித்து உற்சாகம்!!

கராத்தே, ஜூஜோஸ் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை ஒருங்கிணைத்த விளையாட்டாக,உள்ள   கூடோ தற்காப்பு கலை  விளையாட்டை தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இந்நிலையில், தேசிய அளவிலான இரண்டாவது போட்டிகள், ஹிமாச்சல பிரதேச மாநிலம், சோலான் பகுதியில் நடைபெற்றது. 

 இதில்,மகாராஷ்டிரா, கர்நாடகா,கேரளா,உத்தரபிரதேசம்,அரியானா என இந்தியாவின் சுமார் , 25 மாநிலங்களில் இருந்தும்  சுமார் 2500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவை மாவட்டத்தில் இருந்து  குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி,டைட்டன்ஸ் எம்.எம்.ஏ.கிளப்,மற்றும் ஷான் அகாடமி கிளப் ஆகிய மையங்களை சேர்ந்த 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். 

9 வயது முதல் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் மற்றும்  பெண்கள் அணியில் கலந்து கொண்ட வீரர்,வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில்  ஒரு தங்கம்,மூன்று வெள்ளி,ஐந்து வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். இந்நிலையில் கோவை திரும்பிய கூடோ விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி வளாகத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் மேளதாளம் முழங்க பதக்கம் வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர்கள் பிரேம்,புகழேந்தி,பிராங்ளின் பென்னி ஆகியோருக்கு  ரூபாய் நோட்டு மாலை மற்றும் கிரீடங்கள் அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் மாநில செயலாளர் ஷேக் அப்துல்லா பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்,வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்..

முன்னதாக வெற்றி வீராங்கனைகளுக்கு  சிலம்பாட்ட வீரர்கள் வீரதீர சாகசங்கள் செய்து வரவேற்பு வழங்கினர்..இதில் பெற்றோர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments