விளாத்திகுளம் அருகே ECR சாலையில் வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல் போராட்டம் : 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ சண்முகபுரம் ECR சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதால் அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதிகாரிகள் வேகத்தடை அமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்ககாத காரணத்தினால் தொடர்ந்து இப்பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

அதுமட்டுமின்றி, கீழ சண்முகபுரம் ECR சாலையில் விபத்தில் ஏராளமான உயரிழந்த நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்திலும் 4 பேர் பலியான சம்பவத்தையடுத்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வேகத்தடை அமைப்பதற்கு வலியுறுத்தியும் தற்போது வரை வேகத்தடை அமைக்காத காரணத்தினால் கீழ சண்முகபுரம் கிராம மக்கள் திடீரென ECR சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டதோடு 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. 

கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் வழியாக சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றது. இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த சூரங்குடி காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், உடனடியாக இங்கு வேகத்தடை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு காவல்துறை சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போலீசார் கூறி மக்களைப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினர். போலீசாரின் பேச்சு வார்த்தை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

மேலும், அதிக அளவில் விபத்து நடந்து வரும் இந்த கீழ சண்முகபுரம் பகுதியில் விபத்துக்களை தவிர்க்க துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக போதுமான வேகத்தடை அமைப்பதோடு "விபத்து எச்சரிக்கை பலகையையும்" நிறுவ வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது...

நாளைய வரலாறு செய்திக்காக,

விளாத்திகுளம் செய்தியாளர்,

-ந.பூங்கோதை.

Comments