அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்- கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம்!!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த திரைப்படம் இந்தியாவில் பெரும்பாலானோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியும் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் SDPI  கட்சியினர் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு  வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள சாந்தி (தனியார்) திரையரங்கை கோவை மாவட்ட SDPI கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ள சுமார் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு  திரையரங்கை நெருங்கி வரும் பொழுது போலிசார் அவர்களை தடுப்புகளைக் கொண்டு தடுத்தனர்.   

தடுப்புகள் மீறி வருவதற்கு முயன்ற போதிலும் காவல்துறையினர்  தடுத்ததால் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர். பின்னர் காவல் துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார். ராணுவ வீரரின் தியாகம் போற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்த அவர் அதே சமயம் அங்கு இருக்கக்கூடிய உண்மை நிலையை தான் எடுத்துக் கூறும் வகையில் படம் இருக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். இந்த படத்தை தடை செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments