மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதிய வெண்கல சிலை!!


கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் உள்ள  ரவுண்டானாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அடிசியா டெவலப்பர்ஸ் சார்பாக  அமைக்கப்பட்டுள்ள சிலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஸ்கோர்ஸ்,சுங்கம் ரவுண்டானா,போன்ற பகுதிகளில் வெண்கல குதிரை சிலை,உலக உருண்டை,தமிழ் பாரம்பரிய காளை மாடுகள் சிலை,உலக உருண்டையை தாங்கும் மரமனிதன்,உழவர் சிலை போன்றவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் இதே போல பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அருகில் உள்ள ரவுண்டானாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது..

அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனம் சார்பாக அமைக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்,மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ்,மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ்,வருவாய் அலுவலர் சர்மிளா  உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய சிலையை திறந்து வைத்தனர்.

பெண் குழந்தை தோளில் புத்தகப்பையை சுமந்தபடி புத்தகங்களின் மீது ஏறி உலக உருண்டையை நோக்கி செல்வது போல தத்ரூபமாக அமைக்கப்பட்ட சிலை குறித்து,  அடிசியா டெவலப்பர்ஸ்  நிறுவனத்தின் தலைவர்  மணிகண்டன் கூறுகையில்,

பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், பெண்கள் கல்வி பயின்றால்  மட்டுமே சமுதாயத்தில் மாற்றம் உருவாகும் என்ற அடிப்படையில் இந்த சிலையை இங்கு நிறுவி உள்ளதாக தெரிவித்தார்.

அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஃப்ளாக் ஷிப் மீடியா இயக்குனர்கள் சதீஷ்,மஹாபிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகரில் அறிவியல் பூர்வமான சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள  நிலையில்,புதிய மைல்கல்லாக பெண் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக  வைக்கப்பட்டுள்ள இந்த வெண்கல சிலை பொதுமக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி, போத்தனூர்.

Comments