சகல நலன்களும் அருளும் புரட்டாசி மாத வழிபாடு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிகவும் சக்தி வாய்ந்தது. புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் இன்று புதன்கிழமை பிறக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11 என புரட்டாசியில் நான்கு சனிக்கிழமை வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. என்றாலும் பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளய படச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும்.
இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களையும் பெற முடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும். புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும். புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபடும்போது, திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளை நமஸ்காரம் செய்து அவரது திருநாமங்களை உச்சரித்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடுவதால் சீனிவாசப் பெருமாள் சகல செல்வங்களையும் தந்தருள்வார்.
புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும். புரட்டாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும். கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
ஆன்மீகச்சிந்தனையாளர்
- திருமதி சுகன்யா சுரேஷ்குமார்.
Comments