ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், ஐ.பி.எஸ். கலந்து கொண்டு, சமூக வலைத்தளம் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு இயக்கத்தையும், இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
முதலாவதாக நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி.குகன் வரவேற்றார். உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், புற்றுநோயின் கடுமையான தாக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது, ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது, சிகிச்சையை மேம்படுத்துவைத்து மற்றும் சமூகத் தடைகளை நீக்குவது போன்றவை இதன் முக்கிய நோக்கங்களாகும் எனத் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் தனித்துவத்தால் ஒன்றிணைவோம் (United by Unique) என்பதாகும். இது மனிதநேய அடிப்படையிலான புற்றுநோய் பராமரிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன், ஒவ்வொருவரின் புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது என்பதை உணர்த்துகிறது.
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அச்சுறுத்தும் அளவில் அதிகரித்து வருகிறது. 2015-ஆம் ஆண்டில் சுமார் 10 லட்சமாக இருந்த பாதிப்பு 2025-ஆம் ஆண்டில் 16 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையிலான புற்றுநோய் பாதிப்பின் படி, 2021-ஆம் ஆண்டில் 1,07,000 புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மாவட்ட வாரியான தரவுகளில் சென்னை முதல் இடத்திலும், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் அடுத்தடுத்த இடங்களிலும், கோயம்புத்தூர் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
கோவையில் ஆண்களிடையே அதிக அளவில் புற்றுநோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதில் வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அடங்கும். பெண்களிடையே மார்பக புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு படி, இந்தியாவில் புற்றுநோய் பரிசோதனை விகிதம் மிகக் குறைந்த அளவில் உள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 1.9% மட்டுமே நடைபெறுகிறது; மார்பக புற்றுநோய் பரிசோதனை 0.9% ஆக உள்ளது. தமிழ்நாட்டில், கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை 4.8% மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை 9.8% ஆகும். இது உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் 70–80% பரிசோதனை இலக்கை விட மிகவும் குறைவாகும்.
புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதை ஆரம்பகாலதிலேயே கண்டறிய உதவக்கூடிய பரிசோதனைகள் இன்று மிகவும் முக்கியமானது என வலியுறுத்தினார்.
இந்த இடைவெளியை குறைக்கும் வகையில் “ஆரம்ப கட்ட கண்டறிதல் சிகிச்சைக்கு வழிவகுக்கும்” என்ற செய்தியை முன்னெடுக்கும் வகையில் மார்பக புற்றுநோய், வாய்ப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட 14 வகையான புற்றுநோய்களை மையமாகக் கொண்டு சமூக ஊடக விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பிப்ரவரி மாதம் முழுவதும் இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை நடத்துவதாகவும், இது தொடர்ந்து 20-ஆவது ஆண்டாக புற்றுநோய்க்கு எதிராக முன்னெடுக்கப்படும் முயற்சியாகும், என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பேசுகையில், "இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மக்கள் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இதனால் இது தொடர்பான விழிப்புணர்வை இந்த மாதம் முழுவதும் சமூக வலைதளங்கள் மூலமாக மேற்கொள்ள உள்ளோம். இதில் 14 வகையான புற்று நோய்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது."என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கோயம்புத்தூர் சரக காவல் துணை தலைவர் டாக்டர் வி. சசி மோகன், இன்றைய காலகட்டத்தில் நல்ல செய்திகளை விட தேவையில்லாத மற்றும் தவறான செய்திகள் அதிகமாக பரப்பப்படுவதாக கவலை தெரிவித்தார். குறிப்பாக புற்றுநோய் குறித்த தகவல்கள் சமூகத்திலும் பள்ளிகளிலும் குணப்படுத்த முடியாத நோயாக தவறாக காட்சிப்படுத்தப்படுவதாகவும், அதிலும் ரத்தப் புற்றுநோய் தொடர்பான செய்திகள் அதிகம் பரவுவதாகவும் கூறினார்.
தற்போதைய நவீன காலகட்டத்தில் தகவல்கள் உடனடியாக மக்களிடம் சென்று சேர சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் அந்த தகவல்கள் உண்மையானதும் நம்பகத்தன்மை கொண்டதும் ஆக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சமூகத்தில் ஒரு நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது, அந்த நோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதையே காட்டுகிறது என்றும், அதனை சரி செய்ய அதிக அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
புற்றுநோய் குறித்த தவறான தகவல்கள் தற்போது பரவி வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விழிப்புணர்வு முயற்சி முக்கியமானதாக இருக்கும் என்றார். மருத்துவர்கள் மூலம் இத்தகைய பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் போது அதற்கு அதிக நம்பகத்தன்மை உருவாகும் என்றும், புற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு செல்ல இயலாத மக்களுக்கு உதவுவது சமூகத்திற்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கும் என்றும் கூறினார்.
விழிப்புணர்வை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தால், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் தாக்கத்தை குறைக்க முடியும். சரியான புரிதல் இல்லாததே நோயின் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் முழுமையாக குணப்படுத்தக் கூடியவை என்றும், சரியான உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து மீண்டு வர முடியும் என்றும் தெரிவித்தார்.
இந்த நல்ல முன்னெடுப்பு முயற்சி வெற்றியடைய ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பார்கவி நன்றியுரை ஆற்றினார்.
இந்த முயற்சிகளின் மூலம், புற்றுநோய் விழிப்புணர்வு, ஆரம்ப கட்ட கண்டறிதல் மற்றும் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் பரிசோதனை ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் திரு.எஸ்.நரேந்திரன், தலைமை செயல் அதிகாரி திரு.சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு.டி.மகேஷ்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.
Comments