பணத்தை அள்ளி வழங்கிய !!!

கேரளா வெள்ளம்: மகனின் சிகிச்சைக்காக சேர்த்த பணத்தை அள்ளி வழங்கிய தந்தை மனிதம் நிலை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு அவ்வபோது உணர்த்தி விடுகின்றன இயற்கை பேரிடர்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனின் சிகிச்சைக்காக சேமித்த பணத்தை வெள்ள நிதிக்காக வழங்கியுள்ளார் ஒரு தந்தை . இயற்கை பேரிடர் என்பது பல மனிதர்களை அடையாளம் காட்டி விடுகிறது. எந்த சூழலிலும் இறைவன் உதவுவதில்லை மனிதர்கள் தான் உதவ வேண்டும் என்பது நாத்திகர்களின் வாதம். இறைவன் மனிதர்கள் வழியே உதவுகிறார் என்பது ஆத்திகர்களின் வாதம். பிறர் துன்பத்தில் உதவுவதே அடிப்படை மனித குணமாக இருக்க முடியும். ஆனால் சிலரின் உதவிகள் மட்டும், காலத்தை தாண்டி நிலைத்து நிற்கும். கேரளத்தை உருக்குலைத்த வெள்ளமும் அப்படி பல மனிதர்களை அடையாளம் காட்டியிருக்கிறது. தான் விற்பனைக்காக வைத்திருந்த ஆடைகளை அனைத்தையும் அள்ளி வழங்கிய வியாபாரி, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகனின் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய தந்தை என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பத்தினம்திட்டா அருகே உள்ள அடூர் பகுதியைச் சேர்ந்தவர் அனாஸ் அஸ்னா . இவரது மகன் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மகனின் சிகிச்சைக்காக சிறிது சிறிதாக பணம் சேமித்துவைத்திருந்த அனாஸ் அஸ்னா அந்த பணத்தை முழுவதும் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். ஒரு வாரத்தில் மகனின் சிகிச்சைக்கு செல்ல வேண்டிய நிலையில் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார் அனாஸ். அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான அனாஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பம் தனது துன்பத்தை விட மிகப்பெரியது என உருகுகிறார். அனாஸின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ள கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா குழந்தை குணமாக இருப்பதை உறுதி செய்ய பிராந்திய புற்றுநோய் மையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இதே போன்று நவ்சாத் என்ற வியாபாரி செய்த செயலும் கேரள மக்களால் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் உடமைகளை இழந்து மக்கள் தவித்து கொண்டிருந்த நிலையில், தான் விற்பனைக்காக வைத்திருந்த அத்தனை உடமைகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார் நவ்சாத். இது தான் எனது பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் என பூரிக்கும் நவ்சாத்தின் வார்த்தைகளில், தெரிகிறது உதவி புரிவதில் கிடைக்கும் சந்தோசம் இஸ்லாமிய மக்களுக்கு உதவும் இந்துக்கள், இந்துகளுக்கு உதவும் இஸ்லாமியர்கள், திறந்தே வைக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் என கேரளா மனிதத்தை பறைசாற்றி கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் உருக்குலைந்த கடவுளின் தேசத்தை, மனிதத்தால் கட்டமைத்து மீண்டும் கடவுளின் தேசமாகவே நிலைக்க வைத்து கொண்டிருக்கின்றனர் இந்த மனிதர்கள்.


M.SURESH KUMAR


POLLACHI


Comments