பழிக்குப் பழி!!! பலே

முட்டாள்தனமாக இருக்கிறது இந்தக் கைது சம்பவம். இரு தரப்பிலுமே தங்களை கேவலப்படுத்தும் வகையிலேயே நடந்து கொண்டிருக்கிறார்கள். ஐ.என்.எக்ஸ் ஊழல் வழக்கில் சீனா போரா கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியை அப்ரூவராக்கிவிட்டார்கள். முன்னமேயே அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சிதம்பரமும், அவரது மகனும் குற்றவாளிகள் என்று கருதுகிறது சி.பி.ஐ. இதற்கு முன்பு நடந்த சி.பி.ஐ. விசாரணையில் சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்திற்கே நேரில் வந்து விசாரணையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் சிதம்பரம். அப்போது அவர் சரிவர ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியது சி.பி.ஐ. எப்படி.. எந்த வகையில் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதையும் அவர்கள் சொல்லவில்லை. ஆனால் கைது மும்முரத்தில் இருந்தமையால்தான் அவர் சென்ற ஆண்டு மே 30-ம் தேதி சி.பி.ஐ. வழக்கிற்காகவும், ஜூலை 23-ம் தேதியன்று அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கிற்காகவும் முன் ஜாமீன் கோரினார். அந்த முன் ஜாமீன் மனுவையாவது ஒரு வாரத்தில் விசாரித்து தீர்ப்பு சொல்லியிருக்கலாம். விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று சொல்லி விசாரணைக்கு போகச் சொன்னார் நீதிபதி. சிதம்பரம் அதையும் செய்துவிட்டார். | பின்பு வழக்கு விபரங்களைத் தாக்கல் செய்ய சொன்னார். சி.பி.ஐயும், அமலாக்கப் பிரிவும். சிதம்பரத்திடம் மேலும் விசாரிக்காமல் முழு விபரங்களை தாக்கல் செய்ய இயலாது என்றது. இடையிடையே ஒவ்வொரு வாய்தாவிலும் சிதம்பரத்தைக் கைது செய்ய தடையாணையை விதித்துக் கொண்டே சென்றார் நீதிபதி. கடைசியாக என்னத்த கண்டாரோ.. இந்த ஊழலில் கிங் பின்னாக இவரே இருக்கிறார் என்பதாகச் சொல்லி முன் ஜாமீன் மனுவை 7 மாதங்கள் கழித்து தள்ளுபடி செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்து ஒரு முன் ஜாமீன் மனு 7 மாதங்களாக விசாரணையில் இருந்தது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். சிதம்பரத்தை கைது செய்தே தீர வேண்டும் என்ற சி.பி.ஐ.யின் பிடிவாதத்தின் பின்னால் தற்போதைய உள்துறை அமைச்சர் அமீத்ஷா இருக்கிறார் என்பது உலகறிந்த செய்தி. ப.சி. உள்துறை அமைச்சராக இருந்தபோது சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கில் அமீத்ஷாவுக்கு பங்குண்டு என்று சொல்லி அவரை இதே சி.பி.ஐ. மூலமாகக் கைது செய்து சிறையில் அடைக்க வைத்தவர் ப.சி.தான். தான் உள்துறை அமைச்சராக இருந்த அதே மாநிலத்தில், தன்னுடைய கட்சி ஆட்சியில் இருக்கும் அதே நேரத்தில் தான் சிறையில் அடைக்கப்பட நேர்ந்ததை அமீத்ஷாவால் இப்போதுவரையிலும் மறக்க முடியவில்லை. அதோடு விடாமல், அடுத்த 3 மாதங்களுக்கு அமீத்ஷா குஜராத்தில் கால் வைக்கவே கூடாது என்கிற நிபந்தனையோடு ஜாமீன் கிடைக்கவும் வழிவகை செய்தது சிபிஐ தான் பிறந்த மண்ணிலேயே நுழைய விடாமல் செய்தால் எந்த மண்ணின் மைந்தனுக்குத்தான் கோபம் வராது.. வந்துவிட்டது. இப்ப்போது அவர் ஆட்சிக்கு வந்ததும் பழிக்குப் பழி வாங்குகிறார்.. இதுதான் இப்போது நடக்கிறது. தனி மனித விரோதங்களை தீர்த்துக் கொள்ள தங்களது ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்துவது இந்திய அரசியல்வியாதிகளுக்கு இது முதல்முறை அல்ல. பலமுறை நடந்திருக்கிறது. ஆட்சிக்கு வரும் அனைத்துக் கட்சிகளுமே இதை செய்திருக்கின்றன. இப்போது பா.ஜ.க.வின் முறை.. செய்துவிட்டார்கள். கைது செய்யப் போன சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே போனதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. இதெல்லாம் சினிமாவில்தான் இதுவரையிலும் நடந்திருக்கிறது. இப்போது முதல்முறையாக சிபிஐ இந்த டிராமாவை நடத்திக் காண்பிக்கிறது. இது சி.பி.ஐ.க்கே கேவலமான விஷயம். இந்தக் களேபரத்தில் சிதம்பரத்தின் மீதும் தவறு இருக்கிறது. ஒரு முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர். இதே சிபிஐக்கும் அமலாக்கப் பிரிவுக்கும் அமைச்சராக இருந்தவர். நிதியமைச்சராகவும் இருந்தவர். இந்தியாவின் மூத்த வக்கீல்களில் ஒருவர். முன் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் தானே நேரில் வந்து சி.பி.ஐ.யிடம் சரண்டராகியிருந்தால் அவர் மீதான மதிப்பு கூடியிருக்கும். தேவையில்லாமல் ஒரு நாள் இரவில் ஓடி ஒளிந்து. இப்போது கேவலப்பட்டு போய் கைதாகியிருக்கிறார். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சி.பி.ஐ.யின் தலைமை அலுவலகத்திற்குள் அவரே நுழைந்திருந்தால் நிச்சயமாக எதிர்க்கட்சிகள் கூட அவரைப் பாராட்டியிருக்கும். ம்ஹும்.. சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்தவராச்சே. செட்டிநாட்டு சீமானாச்சே. அவ்வளவு சீக்கிரம் ஜெயில் வாழ்க்கையை அவரால் ஏற்க முடியவில்லை . அதே நேரம், இப்போது உச்சநீதிமன்றமே மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்ற எண்ணத்தை இன்றைய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நடந்து கொண்ட விதம் கிளப்புகிறது. | எத்தனையோ வழக்குகளை அவசரம், அவசரமாக விசாரித்து இடைக்கால நிவாரணத்தை வழங்கியவர்கள் "அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப் போகிறார்கள்.." என்று சொல்லியும், கெஞ்சியும் மனமிரங்காமல் "அங்கே போ. இங்கே போ.." என்று கை காட்டி தப்பித்ததைப் பார்த்து.. பாவம் கபில்சிபல். நிச்சயமாக நொந்து போயிருப்பார்..! "எத்தனை அரசியல் சித்து விளையாட்டுக்களை இதே இடத்தில் நிகழ்த்தியிருப்போம்.. எங்களுக்கே அல்வாவா?" என்று காங்கிரஸாரை கதறவிட்டுவிட்டார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். அவசர வழக்கை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாலை 4 மணிக்கு அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தவுடனேயே தலைமறைவானதுதான் இந்தக் கைது விஷயத்தில் பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது. தவறான முன்னுதாரணத்தைக் காண்பித்துவிட்டார் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இனி சிதம்பரத்திற்கு ஜாமீன் எளிதில் கிடைக்கும் என்று தெரியவில்லை . ஒவ்வொரு வழக்காக போட்டு அவரை உள்ளேயே வைத்திருக்கத்தான் மோடியும், அமித்ஷாவும் விரும்புவார்கள். இதுவேதான் நடக்கவும் போகிறது. இந்த கைது நாடகத்தை டில்லி மீடியாக்கள் ஆளுக்கொரு பக்கமாக கையாண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால் இந்தியாவில் நடுநிலையான பத்திரிகைகள் இருக்கிறதா என்கிற சந்தேகமே வருகிறது. ஒவ்வொரு மீடியாவுமே #ChidambaramArrested என்கிற ஹேஸ்டேக்கையும் பிரபலப்படுத்தும் வண்ணம் தங்களது செய்திகளை வழங்கினார்கள். காணாமல் போனது ஜர்னலிஸம்..! | இதேபோல்தான் கடந்தாண்டு பிப்ரவரி 28-ம் தேதி... நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு நடந்த அதே தினத்தன்று, காலையில் லண்டனில் இருந்து சென்னை வந்து சேர்ந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விமானி நிலையத்திலேயே கைது செய்து அன்றைய நாளை பரபரப்பாக்கினார்கள். இப்போது தகப்பனின் முறை.. பாவம்.. ராஜ சர் அண்ணாமலை செட்டியார். தமிழுக்காகவும், மொழிக்காகவும், கலைக்காகவும், கல்விக்காகவும் தன்னுடைய சொந்தப் பணத்தை வாரி வழங்கிய வள்ளல். அவருடைய பேரன் ஊழல் குற்றச்சாட்டில் ஜெயிலுக்குப் போகிறார் என்பது அண்ணாமலை செட்டியாருக்கே இழுக்கானதுதான்..!


A.முகமது இஸ்மாயில்


தலைவர்


இந்திய தேசிய காங்கிரஸ் குறிச்சி சர்க்கிள்.


Comments