வாலிபர் மரணம்!! - திருப்பூரில் கலெக்டர் கார் முற்றுகை!!!

     -MMH


      திருப்பூர்;போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்ற வாலிபர் இறந்ததால், திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.


     தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சரண்யா, (20). கடந்த மாதம், 29ல், இவர் மீது சிலர் சுடுநீர் ஊற்றியதால், படுகாயம் அடைந்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ரூரல் போலீசார் விசாரித்தனர்.இது தொடர்பாக, திருப்பூர், கே.செட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 28 மற்றும் ரேணுகா (22), கலா( 23), ஆகியோரை போலீஸ் தேடி வந்த நிலையில், 16ம் தேதி சரண்யா உயிரிழந்தார்.


     தலைமறைவாக இருந்த மணிகண்டனை, ரூரல் போலீசார் நேற்று காலை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்படவே, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் அவர் இறந்தார்.இதையறிந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள், போலீசார் அடித்ததால் மணிகண்டன் இறந்ததாக கூறி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டனர்.


     ஆர்.டி.ஓ., கவிதா, போலீசார் ஆகியோர் முற்றுகையிட்டவரிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். "பிரேத பரிசோதனை செய்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரிய வரும். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.அதேநேரம், மருத்துவமனையில், இரு கொரோனா நோயாளிகள் இறந்தது தொடர்பாக, ஆய்வு மேற்கொண்டு விட்டு திரும்பிய கெலெக்டர் 'விஜய கார்த்திகேயன்' வாகனத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளின் சமாதானத்துக்கு பின், கலைந்து சென்றனர்.


     கலெக்டர் கூறுகையில், "விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும். பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


     காரணம் என்ன?-போலீசார் கூறியதாவது:"இறந்த சரண்யாவுக்கு, மணிகண்டன், கலா மற்றும் ரேணுகாவுடன் பழக்கம் இருந்து வந்தது. கடந்த 29ம் தேதி, திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் இருக்கும்போது, மூவருடன், சரண்யாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிகண்டன் உட்பட மூவரும் சுடுதண்ணீரை, சரண்யாவின் அடிவயிற்றில் ஊற்றினர்.ஆனால், விசாரணையில், சரண்யா நடந்ததை மறைத்து, வேலை செய்த இடத்தில், ஒரு பெண் அவர்மீது சுடுதண்ணீரை ஊற்றியதாக கூறினார். அவர் இறப்பதற்கு முன்தான், என்ன நடந்தது என்பது தெரியவந்தது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர.


Comments