பொள்ளாச்சியை மிஞ்சுகிறதா காரைக்குடி? சிபிஐ விசாரணை கோரத் தயாராகும் சமூகநலக் கூட்டியக்கம்!

 

-MMH

      காரைக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகு நிலையக் கும்பலிடம் சிக்கிய  மாணவிகள் குறித்து மக்கள் மன்றத்தின் மூலம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பின் பாதிக்கப்பட்ட பல மாணவிகளின் சார்பில் புகாரளிக்க யாரும் முன்வராததால் ஒரே ஒரு பெண்ணின் தந்தையிடம் மட்டும் புகாரினைப் பெற்று, உடனடியாகக் களமிறங்கிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வினோஜி தலைமையிலான காவல்துறையினர், 5பேரைக் கைது செய்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானதால், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேரடியாக விசாரித்து வழக்குப்பதிவு செய்தார்.

மன்சில், விக்னேஷ், சிரஞ்சீவி, லெட்சுமி மற்றும் ஒரு மாணவியையும் காவல்துறை கைது செய்தது. சென்னையைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவரைத் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் காரைக்குடியில் உள்ள 28 இயக்கங்கள் "சமூகநலக் கூட்டியக்கம்" என்ற பெயரில் ஒன்றிணைந்து, இந்த மாணவிகளின் பலாத்காரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, 'பல பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளிடமும் இக்கும்பல் தங்களின் கைவரிசையைக் காட்டியிருக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மாதம்தோறும் கருமுட்டைகள் எடுக்கப்பட்டதாக தாங்கள் சந்தேகிப்பதாகவும், அதில் மறைந்திருக்கும்  பல மர்மங்களை வெளிக்கொணர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேற்கண்ட கோரிக்கைக்காக நீதி விசாரணை வேண்டி செவ்வாய்கிழமையன்று போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும், 'பாதிப்புக்குள்ளாகிய மாணவிகளை தீபாவளிக்கு முன்பே கண்டுபிடித்து விசாரித்த ஒரு அரசு உதவி பெறும் பள்ளியின் பொறுப்பாளர்கள், அதனை கல்வித்துறையினரிடம் தகவல் தெரிவிக்காததையும், காவல்துறையினரிடம் புகாரளிக்காமல் மறைத்துள்ளதையும் கண்டித்துள்ளதோடு, அப்பள்ளியின் பொறுப்பாளராக இருப்பவரை உடனடியாக அப்பள்ளியில்  இருந்து வெளியேற்ற வேண்டும்' எனவும்  கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் அளவிற்கு காரைக்குடியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவருவது சமூக ஆர்வலர்களிடையே கவலை அளிப்பதாக உள்ளது.

'ஆவுடைப்பொய்கை பாலியல் வழக்கு மற்றும் கல்லூரி மாணவிகள் பாலியல் வழக்கு என தொடர்ந்து நடந்த பாலியல் குற்றங்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதால்தான் இன்று பள்ளி மாணவிகளிடம் இக்கும்பல் கைவரிசையைக் காட்டியிருக்கிறது எனவும், வழக்கம்போல் இந்த முறையும் உண்மைகளை மூடிமறைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவதால் காரைக்குடியில் உள்ள சமூக ஆர்வலர்கள் இனிமேலும் வேடிக்கை பார்க்கமாட்டோம்' எனவும் சமூக நலக் கூட்டியக்கம் சார்பில் தெரிவித்துள்ளனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments