மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக!! - மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு..!!

          -MMH 


மத்திய அரசு அதிரடி அறிவிப்பு... திருச்சியில் நடக்கப்போகும் நல்ல காரியம் இதுதான்... என்னனு தெரியுமா?


      தமிழகத்தின் திருச்சி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு மின்சார பேருந்துகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.     இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு படிப்படியாக விடை கொடுத்து விட்டு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையில் சிக்கியுள்ளன


     காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க வேண்டும் என்பதுதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மிகவும் முக்கியமான காரணம். இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் திட்டமாக உள்ளது. மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன.


     மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, ஃபேம் இந்தியா (FAME India) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டம் (Phase-II) தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.


      இந்த சூழலில் ஃபேம் இந்தியா திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், பல்வேறு மாநிலங்களுக்கு மின்சார பேருந்துகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்களை மத்திய அரசு தற்போது ஒதுக்கியுள்ளது. இதன்படி குஜராத், சண்டிகர், கோவா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு 670 மின்சார பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


     அதே சமயம் குஜராத், தமிழ் நாடு, மத்திய பிரதேசம், கேரளா, போர்ட் பிளேர் ஆகிய பகுதிகளுக்கு 241 சார்ஜிங் ஸ்டேஷன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது மற்றும் வாகன உமிழ்வு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நடவடிக்கை பிரதிபலிக்கிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.     மேலும் சுற்றுச்சூழலுக்கு நட்பான பொது போக்குவரத்து என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு ஏற்ப இது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய நகரங்களுக்கு முறையே 25, 27 மற்றும் 28 சார்ஜிங் ஸ்டேஷன்களை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதுதவிர போர்ட் பிளேருக்கு 10 சார்ஜிங் ஸ்டேஷன்களும், தமிழகத்தின் திருச்சிராப்பள்ளிக்கு 25 சார்ஜிங் ஸ்டேஷன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன எனவும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். சார்ஜிங் ஸ்டேஷன்களை கட்டமைப்பது என்பது மின்சார வாகனங்களை பிரபலமாக்குவதற்கு மிக அவசியமான உள்கட்டமைப்பு தேவை எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


     இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஏற்கனவே பல்வேறு நகரங்களில் 450 பேருந்துகள் ஓடி வருகின்றன. தற்போது 670 மின்சார பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மஹாராஷ்டிரா 240 பேருந்துகளையும், குஜராத் 250 பேருந்துகளையும், கோவா 100 பேருந்துகளையும், சண்டிகர் 80 பேருந்துகளையும் பெற்றிருக்கின்றன" என்றார்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப், திருப்பூர்.


Comments