ஹெல்மெட் அணியவில்லை என நோட்டிஸ்!! - காரில் சென்றவருக்கு அதிர்ச்சி!!

      -MMH


   காரில் சென்றவர், 'ஹெல்மெட் அணியவில்லை' எனக் கூறி, போலீஸ் அபராதம் விதித்து, 'நோட்டீஸ்' அனுப்பிய கூத்து, சேலத்தில் நடந்துள்ளது.


    சேலம் மாவட்டம், நடுவனேரியைச் சேர்ந்தவர் சம்பூர்ணம், 52. இவர், 'டாடா இண்டிகா' காரை பயன்படுத்துகிறார். ஆக., 30ல், திருச்சி சென்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை, அவரது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. அதில், 'தாங்கள் இருசக்கர வாகனம் ஓட்டிய போது, தலைக்கவசம் ஆவணங்கள் இல்லை என்பதால், 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டிருந்தது.அவர், இத்தகவலை, சென்னையில் உள்ள தன் மகனுக்கு அனுப்பினார்.


  அவர், போக்குவரத்து காவல் துறை இணையதளத்தில் பார்த்தபோது, கார் பதிவெண்ணுக்கு அபராதம் விதித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் சம்பூர்ணம் கேட்டபோது, 'நோட்டீஸ் அனுப்பிய, எஸ்.ஐ., வெளியே சென்றுள்ளார்.


      அபராத நோட்டீசில், தவறாக அச்சிடப்பட்டு விட்டது. அபராத தொகையை இணையதளத்தில் செலுத்தி, போலீஸ் ஸ்டேஷனில் வந்து, அத்தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்' என, அறிவுறுத்தினர். அதிர்ச்சி அடைந்த சம்பூர்ணம், புலம்பி வருகிறார். அதே நேரம், காரில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதாக அபராதம் விதித்த நோட்டீஸ், கார் ஆகியவற்றின் படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


-சோலை, சேலம்.


Comments